26-ந்தேதி மெகா தடுப்பூசி முகாம் : தமிழக சுகாதாரத்துறை வேண்டுகோள்..

By 
vacc

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது :

தமிழகம் முழுவதும் கொரோனா படிப்படியாக குறைந்து வருகிறது. தினசரி பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து விட்டது. இது மகிழ்ச்சிக்குரிய வி‌ஷயம்.

முதல் தவணை தடுப்பூசி 92 சதவீதம் பேரும், 2-வது தவணை தடுப்பூசி 72 சதவீதம் பேரும் போட்டுள்ளார்கள். மொத்தம் 9 கோடியே 88 லட்சத்து 40 ஆயிரத்து 169 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்த வார இறுதிக்குள் 10 கோடியை தொட்டுவிடும். இதுவரை ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் 2-வது தவணை தடுப்பூசி போட வில்லை. தடுப்பூசி மட்டுமே கொரோனாவில் இருந்து நம்மை காக்கும்.

எனவே, அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். வருகிற 26-ந் தேதி 23-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே இறப்பில் இருந்தும், மிகப்பெரிய பாதிப்புகளில் இருந்தும் மீண்டு இருக்கிறார்கள்.

ஒன்றிய அரசின் விதிமுறைப்படி 25 சதவீத தடுப்பூசிகளை தனியார் மருத்துவ மனைகள் கொள்முதல் செய்தன. 

தற்போது, தனியார் மருத்துவ மனைகளில் ஏராளமான தடுப்பூசிகள் தேக்கம் அடைந்துள்ளன. அவற்றை காலாவதியாவதற்குள் பயன்படுத்திக்கொள்ள தனியார் நிறுவனங்களும், மருத்துவமனைகளும் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நோய் பாதிப்பு எண்ணிக்கையை குறைத்து காட்டுவதாக தவறாக விமர்சிக்கிறார்கள். கிங் இன்ஸ்டிடியூட்டில் 800 படுக்கைகள் உள்ளன. அதில் 20 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதேபோல், ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் 2,250 படுக்கைகளில் 50-க்கும் குறைவான நோயாளிகளே உள்ளார்கள். 

எண்ணிக்கையை குறைத்து காட்டுவதிலோ, அதிகரித்து காட்டுவதிலோ எதுவும் இல்லை' என்றார்.

Share this story