சென்னையில் 2-வது புதிய விமான நிலைய எதிர்ப்பு : 13 கிராம மக்கள் திடீர் போராட்டம்

paran

சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. புதிய விமான நிலையம் அமைக்க பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட சுற்றி உள்ள 13 கிராமங்களில் இருந்து சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் குடியிருப்பு பகுதிகளையும் நீர்நிலை பகுதிகளையும் எடுக்க திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது. இதற்கு ஏகனாபுரம், அக்கமாபுரம், மேலேரி, வளத்தூர், தண்டலம், நாகப்பட்டு, நெல்வாய், மகா தேவி மங்கலம், உள்ளிட்ட 13 கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

புதிய விமான நிலையம் அறிவிப்பு வெளியான நாள் முதல் ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதேபோல் 13 கிராம மக்களும் கிராம சபை கூட்டத்தின்போது பரந்தூர் புதிய விமான நிலையம் வருவதை எதிர்த்து ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றி வருகிறார்கள்.

இந்நிலையில் பரந்தூர் புதிய விமான நிலையத்துக்கு எதிராக ஏகனாபுரம் மக்களின் போராட்டம் இன்று 300-வது நாளை எட்டியது. இதைத்தொடர்ந்து பரந்தூரை சுற்றி உள்ள நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் 13 கிராமங்களை சேர்ந்த விமானநிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினர் ஏராளமானோர் குவிந்தனர்.

அவர்கள் 300-வது நாள் போராட்டத்தை இன்று காலை திடீரென வயலூர் பகுதியில் உள்ள ஏரியில் இறங்கி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். 

Share this story