48 மணி நேரத்தில் 31 நோயாளிகள் இறப்பு: மருத்துவமனையின் முதல்வர், மருத்துவர் மீது வழக்குப் பதிவு

By 
dead9

மகாராஷ்டிர அரசு மருத்துவமனையில் 31 நோயாளிகள் உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவமனை முதல்வர் (டீன்) மற்றும் மருத்துவர் ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் நான்டெட்நகரில் சங்கர்ராவ் சவான் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்ளது. அங்கு கடந்த செப்.30-ம் தேதி முதல், 48 மணி நேரத்தில் 16 பச்சிளம் குழந்தைகள் உட்பட 31 நோயாளிகள் உயிரிழந்தனர். இதையடுத்து அக். 2-3 தேதிகளில் மேலும் 6 நோயாளிகள் இறந்தனர்.

மருத்துவமனையில் மருந்து மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் மருந்து பற்றாக்குறை ஏதும் இல்லை என மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறினார். நோயாளிகள் உயிரிழப்பை அரசு தீவிரமாக எடுத்துக் கொண்டுஉள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த மருத்துவமனையின் திறந்தவெளி சாக்கடையில் பன்றிகள் மேய்வது உள்ளிட்ட சுகாதார சீர்கேடுகள் குறித்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பணியில் அலட்சியமாக செயல்பட்டதாக இந்த மருத்துவமனையின் தற்காலிக டீன் எஸ்.ஆர்.வாகோடி மற்றும் தலைமை குழந்தைகள் நல மருத்துவர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் 304-வது பிரிவு (கொலைக் குற்றம் ஆகாத மரணத்தை விளைவிக்கும் குற்றம்) மற்றும் 34-வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனையில் அஞ்சலி என்ற 21 வயது பெண்ணும் அவரது பச்சிளம் குழந்தையும் உயிரிழந்தது தொடர்பாக அஞ்சலியின் தந்தை அளித்த புகாரின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனையில் ஷிண்டே பிரிவு சிவசேனா எம்.பி. ஹேமந்த் பாட்டீல் கடந்த செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார். அப்போது ஒரு கழிப்பறை அசுத்தமாக இருப்பதை கண்ட அவர், மருத்துவமனை டீன் வாகோடியிடம் துடைப்பத்தை கொடுத்து அதை சுத்தம் செய்ய வைத்தார். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இதையடுத்து எம்.பி. ஹேமந்த் பாட்டீலுக்கு எதிராக எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Share this story