கோயில் விழா பிரச்சினையில், தொடரும் பதற்றத்தால் கடைகள் அடைப்பு: மோதலில் ஈடுபட்ட 31 பேர் கைது..

By 
theee

சேலம் அருகே கோயில் திருவிழா நடத்துவது தொடர்பாக இருதரப்பினர் மோதிக் கொண்ட சம்பவத்தில் 31 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். பதற்றமான சூழலல் நிலவி வருவதால், அப்பகுதியில் தொடர்ந்து போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம், தீவட்டிபட்டியில்  இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் நடத்தப்படும் சித்திரை திருவிழாவை ஒரு தரப்பினர் மட்டுமே நடத்தி வருவது வழக்கம். இந்தாண்டு, கோயில் திருவிழாவை மற்றொரு தரப்பினரும் நடத்திடுவதாக கூறியுள்ளனர்.

இதனால், நேற்று இருதரப்புக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையை முன்னிட்டு, வட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், இருதரப்பினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டும், பழக்கடை, பேக்கரி, தேநீர் கடை என ஐந்து கடைகளுக்கு தீ வைத்து கொளுத்தியதால் பதற்றமான சூழ்நிலை உருவானது.

தகவல் அறிந்து வந்த சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்கபிலன் தலைமையிலான போலீஸார் கலவரம் ஏற்படாமல் தடுத்து, மோதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்தனர்.

ஐந்து ஏடிஎஸ்பிக்கள், ஏழு டிஎஸ்பிக்கள் தலைமையில் 100 போலீஸார் தீவட்டிப்பட்டியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக கிராம நிர்வாக அதிகாரி அம்பேத்கர் தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த மோதல் சம்பவத்தில் சதாசிவம், ரவிச்சந்திரன், சீனிவாசன் ஆகிய மூன்று போலீஸார் காயம் அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படடனர். கடைக்கு தீ வைத்து, கல் வீச்சில் ஈடுபட்டதாக இருதரப்பிலும் 31 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இன்று இரண்டவாது நாளாக தீவட்டிப்பட்டியில் பலரும் கடைகளை அடைத்து வைத்துள்ளனர். மீண்டும் மோதல் சம்பவம் நிகழாவண்ணம் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீஸார் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Share this story