4 ஏடிஎம்.களில் வடமாநில கும்பல் துணிகர கொள்ளை : 4 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்..

By 
robbery4

திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 மணி நேரத்தில் 4 ஏ.டி.எம். மையங்களில் கொள்ளையடித்த அரியானா கும்பல் ராணிப்பேட்டை மாவட்டம் வழியாக சித்தூர் சென்றது தெரியவந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வடமாநில கும்பல் தேசியமயமாக்கப்பட்ட 3 வங்கி ஏ.டி.எம்., ஒரு தனியார் ஏ.டி.எம் மையம் என 4 ஏ.டி.எம் எந்திரங்களை கியாஸ் வெல்டிங் மூலம் உடைத்து ரூ.75 லட்சம் கொள்ளையடித்து சென்று விட்டனர். இது தொடர்பாக வடக்கு மண்டல ஐஜி கண்ணன் திருவண்ணாமலையில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும், வேலூர் சரக டிஐஜி முத்துசாமி மற்றும் 5 மாவட்ட எஸ்.பி.க்கள் அடங்கிய குழுவினர் கொள்ளை கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கொள்ளை கும்பல் ஏ.டி.எம். மையங்களை முன்கூட்டியே நோட்டமிட்ட பிறகே திட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட டாடா சுமோ கோல்ட் கலர் வாகனத்தில் முகத்தை மூடியபடி மங்கி குல்லா அணிந்த 6 பேர் கும்பல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் ஏ.டி.எம். மையங்களில் கொள்ளையடிக்கும் காட்சிகள் தெளிவாக பதிவாகியுள்ளது. ஆனால் கொள்ளையர்களின் கண்கள் தவிர வேறு எதுவும் தெரியவில்லை அந்த அளவுக்கு தங்களது உடல் மற்றும் முகத்தை மறைத்துள்ளனர்.

தேனிமலை ஏ.டி.எம். மையத்தில் கும்பல் கொள்ளையடித்த போது ஷட்டரை மூடிக்கொண்டு உள்ளே கைவரிசை காட்டியுள்ளனர். அப்பொழுது அந்த வழியாக சென்ற பொது மக்கள் ஏ.டி.எம். மையத்தில் வங்கி அதிகாரிகள் பணம் நிரப்புகிறார்கள் என நினைத்து அதனை கண்டு கொள்ளாமல் சென்றுள்ளனர். இது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதிகாலை 1.19 மணிக்கு முதல் கொள்ளையை தொடங்கியுள்ளனர். பின்னர் அவர்கள் அவளூர்பேட்டை ரோடு, கலசப்பாக்கம், போளூர் பகுதியில் உள்ள ஏ.டி.எம் மையங்களில் கொள்ளையடித்துள்ளனர். ஒவ்வொரு மையத்திலும் ஷட்டரை இறக்கிவிட்டு காஸ் வெல்டிங் மூலம் 20 நிமிடங்களில் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.

கடைசியாக நேற்று முன்தினம் அதிகாலை 4.20 மணிக்கு போளூரில் கொள்ளையை முடித்துவிட்டு புறப்பட்டுள்ளனர். 3 மணி நேரத்தில் 4 ஏ.டி.எம் மையங்களில் கொள்ளையடித்தவர்கள் தேவிகாபுரம், ஆரணி, ஆற்காடு, ராணிப்பேட்டை, பொன்னை வழியாக ஆந்திர மாநிலம் சித்தூர் சென்றுள்ளனர். வழியில் உள்ள எந்த சுங்கச்சாவடியிலும் இவர்களது வாகனம் கடக்காமல் இருந்துள்ளது. சுங்கச்சாவடியை தவிர்த்தே கொள்ளை கும்பல் தப்பியுள்ளது.

சுமார் 400 கண்காணிப்பு கேமராக்களை போலீசார் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். இதையடுத்து, ஆந்திர மாநிலத்தில் முகாமிட்டுள்ள தனிப்படையினர் சுங்கச்சாவடி இல்லாத சாலைகளில் கொள்ளையர்களின் டாடா சுமோ கார் கடந்து சென்றுள்ளதா? என விசாரித்து வருகின்றனர். கொள்ளையர்கள் பயன்படுத்திய வாகனத்தின் ஆந்திர பதிவெண் மட்டும் இதுவரை உறுதியாகவில்லை.

தொடர்ந்து தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி இரவு திருவண்ணாமலை, போளுர், கலசபாக்கம் ஆகிய பகுதிகளில் கொள்ளை சம்பவம் நடைபெற்ற பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர்கள் மோகன், பலராமன் தட்சிணாமூர்த்தி மற்றும் போலீஸ்காரர்கள் வரதராஜ், சுதாகர் உள்பட 6 பேரை திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.

ரோந்து பணியில் ஈடுபட்ட 6 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட சம்பவம் திருவண்ணாமலை போலீசார் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 

Share this story