பழனிவேல் தியாகராஜன் உள்பட 4 பேர் இலாகா மாற்றம் : புதிய நிதியமைச்சர் நியமனம்..

By 
tng4

புதிய அமைச்சராக டி.ஆர்.பி.ராஜா பதவி ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து அவருக்கான இலாகா ஒதுக்கீட்டு விவரத்தை கவர்னரின் முதன்மை செயலாளர் அறிவிக்கை ஒன்றின் மூலம் வெளியிட்டார்.

அதன்படி புதிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவர் தொழில்துறை மந்திரி என்று அழைக்கப்படுவார். இதுவரை தொழில்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு அந்த துறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பழனிவேல் தியாகராஜன் வகித்து வந்த நிதி இலாகா வழங்கப்பட்டுள்ளது.

மேலும் திட்டம், மனிதவள மேம்பாடு, பென்ஷன், புள்ளியியல் மற்றும் தொல்லியல் துறைகளையும் தங்கம் தென்னரசு கவனிப்பார். அவர் நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார்.

செய்தித்துறை அமைச்சராக இருந்த சாமிநாதன் வசம் கூடுதல் இலாகாக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவர் தமிழ் மொழி, தமிழ் கலாசாரம், தகவல், பட தொழில்நுட்பம் உள்ளிட்ட பொறுப்புகளை கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் இனி செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார்.

பழனிவேல் தியாகராஜனிடம் இருந்து நிதித்துறை விலக்கப்பட்டுள்ளது. அவருக்கு தகவல் தொழில் நுட்பம், டிஜிட்டல் சேவை துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அவர் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார்.

இதுவரை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த மனோ தங்கராஜனிடம் இருந்து அந்த துறை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. அவருக்கு பால்வள மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவர் பால்வளத்துறை அமைச்சராக அழைக்கப்படுவார். இவ்வாறு கவர்னர் மாளிகை செய்திக்குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


 

Share this story