4 போலீசார் படுகாயம், வாகனமும் தீ வைப்பு : கேரளாவில் 100 பேர் கைது..

4 policemen injured, vehicle set on fire 100 arrested in Kerala ..

கேரளா மாநிலம், கொச்சி அருகே கிழக்கம்பலம் பகுதியில் நாகலாந்த் மற்றும் மணிப்பூர் மாநிலங்களை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளிகள் தங்கி உள்ளனர். 

கொச்சி தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இந்த தொழிலாளிகள் அனைவரும், நேற்றிரவு கிறிஸ்துமஸ் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.

அவர்களில் சிலர், மது போதையில் இருந்தனர். மது அருந்தியவர்கள் கூச்சல்போட்டபடி அந்த பகுதியை சுற்றி, சுற்றிவந்தனர். 

இதனை அக்கம்பக்கத்தில் வசித்தவர்கள் கண்டித்தனர். இதனால் தொழிலாளிகளுக்கும், அக்கம் பக்கத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அடி-உதை :

சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பு மூண்டது. அப்போது, கூட்டத்தில் இருந்த சிலர் கற்களை வீசித் தாக்கினர். 

மேலும் இச்சம்பவத்தை செல்போனில் பதிவு செய்தவர்களையும் அடித்து உதைத்தனர்.
அவர்களின் செல்போனையும் பறித்து உடைத்தனர். நேரம் செல்லச் செல்ல அங்கு பதட்டம் அதிகமானது.

தீ வைப்பு :

இதுபற்றி, அந்த பகுதி மக்கள் குன்னத்துநாடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். நேற்று பண்டிகை நாள் என்பதால், போலீஸ் நிலையத்தில் குறைந்த அளவே போலீசார் இருந்தனர். 

இதனால் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் மட்டும் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.

அவர்கள் மோதலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு எச்சரித்தனர். இதனை கேட்க மறுத்த தொழிலாளிகள், போலீசாரையும் சரமாரியாக தாக்கத் தொடங்கினர். 

மேலும், அவர்கள் வந்த ஜீப்புக்கும் தீ வைத்தனர். மேலும் அந்த வழியாக வந்த வாகனங்களையும் அடித்து உடைத்தனர்.

இந்த தாக்குதலில் குன்னத்துநாடு இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 2 போலீசார் என 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

100 பேர் கைது :

நிலைமை விபரீதமானதை தொடர்ந்து, இதுபற்றி உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

ஆலுவா போலீஸ் சூப்பிரண்டு தலைமையில், 500-க்கும் மேற்பட்ட அதிரடி படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசார் மோதலில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்திக் கலைத்தனர். 

மேலும் போலீசாரை தாக்கியும், வாகனங்களுக்கு தீ வைத்ததாகவும் 100 பேரைக் கைது செய்தனர்.  

இந்த சம்பவம், கொச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
*

Share this story