பயங்கரவாதிகள் தாக்குதலில், 4 போலீசார் பலி..

terr31

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணம் லக்கி மார்வாட் நகரில் உள்ள போலீஸ் நிலையத்தில் இன்று அதிகாலை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். 

போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய போது அங்கு குறைவான போலீசாரே இருந்தனர். 

இதையடுத்து பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து கூடுதல் போலீசார் ஒரு வாகனத்தில் அனுப்பப்பட்டனர். அப்போது அங்கு போலீஸ் வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. 

இதில் 4 போலீசார் பலியானார்கள். போலீஸ் நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 6 போலீசார் காயம் அடைந்தனர். 

தாக்குதல் நடத்திய பின்னர் பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாக உள்ளூர் போலீஸ் அதிகாரி அஷ்பக்கான் தெரிவித்தார். 

இந்த இரண்டு தாக்குதலுக்கு தெக்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளனர். 

பாகிஸ்தான் அரசாங்கத்துடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் தலிபான்கள் முடிவுக்கு கொண்டு வந்ததையடுத்து பாகிஸ்தானில் தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Share this story