2 ஆண்டுகளில் 50 ஆயிரம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு..

By 
stalinletter1

மக்களுடன் முதல்வர் திட்டப் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் 1598 இளைஞர்களுக்கு அரசுப் பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் பணிநியமன ஆணைகளை வழங்கி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், 

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு எத்தனையோ முத்திரை பதிக்கக்கூடிய திட்டங்களை நாங்கள் தீட்டியிருக்கிறோம். அதில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய வகையில், மகளிருக்கான விடியல் பயணம், புதுமைப் பெண் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்,

கலைஞர் மகளிர் உரிமை திட்டம்., இல்லம் தேடிக் கல்வி, மக்களைத் தேடி மருத்துவம், ஒலிம்பிக் தங்கப் பதக்கத் தேடல், நான் முதல்வன், உங்கள் தொகுதியில் முதலமைச்சர், முதல்வரின் முகவரி கள ஆய்வில் முதலமைச்சர் இப்படி நான் சொல்லிக் கொண்டே போகமுடியும். இந்த திட்டங்கள் எல்லாம் கோடிக்கணக்கான மக்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கின்ற திட்டங்களாக அமைந்திருக்கின்றன.

 இந்த வரிசையில் இந்த திராவிட மாடல் அரசால் உருவாக்கப்பட்ட திட்டம் தான் மக்களுடன் முதல்வர் என்கிற இந்த மகத்தான திட்டம்! இந்தத் திட்டத்தின் பயனாளிகளுக்கு அரசு சேவைகளை வழங்குகிற இனிய நிகழ்ச்சியில் பங்கு பெறுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். "மக்களிடம் செல் மக்களோடு வாழ் மக்களுக்காக வாழ்” என்பதுதான் எங்களை ஆளாக்கிய பேரறிஞர் அண்ணாவும் தமிழினத் தலைவர் கலைஞரும் காட்டிய பாதை என்பதை நாங்கள் மறந்துவிட மாட்டோம்.

ஆட்சியில் இல்லாதபோது மக்களுக்காகப் போராடுவோம், வாதாடுவோம். ஆட்சியில் இருக்கின்ற நேரத்தில், மக்களுக்காக திட்டங்களை தீட்டுவோம், நன்மைகளை வழங்கிக் கொண்டே இருப்போம். அத்தகைய நன்மைகளை நேரடியாக ஒவ்வொரு மனிதருக்கும் வழங்குகிற மாபெரும் திட்டம்தான் மக்களுடன் முதல்வர் என்கின்ற இந்தத் திட்டம்.

தேவையற்ற தாமதங்களை தவிர்த்தோம். அவசியமில்லாத கேள்விகளை குறைத்தோம். இதனால்தான், சேவைகளை விரைவாகவும், எளிதாகவும் பெற முடிகின்றது என்று இன்றைக்கு மக்கள் மனதார பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள், முதியோர் போன்றோருக்கான சேவைகள முதலிலேயே கண்டறிந்து, தீர்த்து வைப்பதில் இந்தத் திட்டம் வெற்றி பெற்றிருக்கிறது. இந்தத் திட்டம் என்னுடைய நேரடி கண்காணிப்பில் இருக்கிறது.

முதற்கட்டமாக, அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகளில் 2 ஆயிரத்து 58 முகாம்கள் நடத்தப்பட்டது. இரண்டாம் கட்டமாக, எல்லா மாவட்டங்களிலும் இருக்கின்ற ஊரகப் பகுதிகளில் இந்த முகாம்கள் நடத்தப்பட்டிருக்கிறது. பெறப்பட்ட மனுக்களை முதலில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்கிறார்கள். அதன்பிறகு தொடர்புடைய துறைக்கு அனுப்புகிறார்கள். முப்பதே நாட்களில் இந்த நடவடிக்கைகள் மூலமாக, நான் பெருமையோடு சொல்கிறேன், 3 இலட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுக்கு தீர்வுகள் வழங்கப்பட இருக்கிறது. 

பல ஆண்டுகளாக, நிலுவையில் இருந்த கோரிக்கைகள் இந்தச் சிறப்பு முகாம்கள் மூலமாக முடிவுற்றதை பத்திரிகைகள், செய்தி ஊடகங்கள் பாராட்டிக் கொண்டிருக்கிறது. மக்கள் அளிக்கும் ஒவ்வொரு மனுவுக்கும் முடிவு காண்பதே முக்கியம் என்று நினைக்காமல், விடிவு காண்பதே நோக்கம் என்று செயல்பட்டால் தான் அரசு மேல் ஏழைகள் வைத்திருக்கக்கூடிய நம்பிக்கை வலுவடையும். அத்தகைய நம்பிக்கையை விதைக்கின்ற திட்டமாக மக்களுடன் முதல்வர் திட்டம் அமைந்திருக்கிறது. இதற்கு காரணமான அமைச்சர்களையும், அனைத்து அரசு அதிகாரிகளையும் நான் நன்றியுணர்வோடு பாராட்டுறேன், வாழ்த்துகிறேன்.

இந்த நிகழ்ச்சியில் மற்றுமொரு சிறப்பு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்குப் பணி ஆணை வழங்கியிருக்கிறோம். கழகம் ஆட்சிக்கு வந்தது முதலாவே, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகமாக உருவாக்கிக் கொண்டு வருகிறோம். முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலமாக, பல்வேறு புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வருகிறது. இதுவரை 60 ஆயிரத்து 567 இளைஞர்களுக்கு அரசுப் பணி நியமனங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் தேர்வாணைய முகமைகள் மூலமாக 27 ஆயிரத்து 858 பணியிடங்களுக்குப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். 

அடுத்த இரண்டு ஆண்டுகளில், மேலும் 50 ஆயிரம் புதிய பணியிடங்கள் நிரப்பப்படும் என்று மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் 10 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகதான், இன்றைக்கு 1,598 பணியிடங்களுக்குத் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படுகிறது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். 

Share this story