5 மணி நேர போராட்டம் : ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தை மீட்பு..

child4

உத்தர பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், கோட்லா சதத் என்ற பகுதியில், மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றுக்குள் 4 வயது ஆண் குழந்தை ஒன்று தவறி விழுந்துள்ளது.

இது தொடர்பாக உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், குழந்தையை மீட்பதற்காக தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அங்கு வரவழைக்கப்பட்டனர். சுமார் 55 அடி ஆழம் கொண்ட அந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து குழந்தையை மீட்க மீட்புப் படையினர் விறுவிறுப்பாக செயல்பட்டனர்.

குழந்தைக்கு பேச்சுத் திறன் இல்லாததால், குழந்தையுடன் தொடர்பு கொண்டு பேச முடியவில்லை. இதனால் மீட்புப் பணி சவால் நிறைந்ததாக இருந்தது. குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்படாமல் இருப்பதற்காக ஆழ்துளை கிணற்றுக்குள் ஆக்சிஜன் செலுத்தப்பட்டது.

இந்நிலையில், சுமார் 5 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு குழந்தையை மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர். உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். குழந்தையின் உடலில் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Share this story