மீட்புப் பணிக்கு 6 ஹெலிகாப்டர்கள்.. கடந்த 24 மணி நேரத்தில் 25,000 உணவு பொட்டலங்கள் விநியோகம்: தமிழக அரசு தகவல்..

By 
tamilnadu govt

தென்மாவட்டங்களில் பெய்து வரும் மழை பாதிப்புகள் மற்றும் அதன் மீட்பு பணிகள் குறித்து சென்னை எழிலகத்தில் அமைந்துள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;-

 தூத்துக்குடி மாவட்டத்தில் விமான படை மூலம் 6 ஹெலிகாப்டர்களும், கப்பல் படை மூலமாக 2 ஹெலிகாப்டர்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர்கள் உதவியுடன் மீட்பு பணிகள் மற்றும் மக்களுக்கு உணவு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 50 படகுகள் இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து, தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று செல்கிறது. தேசிய, மாநில மீட்பு படையினர் 1,100 பேர் பணியில் உள்ளனர். படகுகள் மூலம் மக்கள் மீட்கப்பட்டு வருகிறார்கள்.

நடமாடும் மருத்துவ முகாம்கள் மூலம் மீட்கப்பட்டும் மக்களுக்கு உடனடியாக மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. 10,082 பேர் நிவாரண முகாம்களில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 25,000 உணவு பொட்டளங்கள் வழங்கப்பட்டுள்ளன. வெள்ள நீரை அகற்றுவதற்காக சென்னையிலிருந்து 100 மோட்டார் பம்ப்கள் அனுப்பப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட நெடுஞ்சாலைகள் சீர் செய்யப்பட்டு வருகிறது.

நகராட்சி துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர்கள் உள்ளிட்ட 10 அமைச்சர்கள் களத்தில் இருந்து செயலாற்றி வருகிறார்கள். நெடுஞ்சாலைகளில் அடைப்பு இருக்கிறது. அது சரி செய்த பின் போக்குவரத்து சீராகும். சேலம், திருப்பூரில் இருந்து பால்பவுடர் கொண்டு செல்லப்படுகிறது. சில பகுதிகளில் தண்ணீர்  சவாலான பகுதிகளில் பால் பொருட்கள் கொண்டு செல்வதில் சிரமமும் இருக்கிறது.
 
பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 15,526 தொலை தொடர்பு கோபுரங்கள் இருக்கின்றன. அதில், 1,684 தொலை தொடர்பு கோபுரங்கள் செயலிழந்துள்ளன. இதனால் தகவல் தொடர்பு பாதிக்கப்பட்டுள்ளது. ஶ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சுமார் 300 பேர் இருக்கிறார்கள். 200 பேர் அருகில் உள்ள பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டுள்ளது. ரயில் நிலையத்தில் இருந்து மீட்கப்பட்டு பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டு இருந்தவர்களில் கர்ப்பிணி உட்பட 4 பேர் ஹெலிகாப்டர் மூலம் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடியில் பெரிய அளவு இன்னும் தண்ணீர் வடியவில்லை. நகர் பகுதிகளில் வடிய தொடங்கி இருந்தாலும், கிராமப்புறங்களில் தண்ணீர் நிற்கிறது. முதல்வர் தொடந்து அதிகாரிகள், அமைச்சர்களோடு தொடர்பு கொண்டு நிலவரம் கேட்டு, அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறார். தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு 10 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியில் இருக்கிறார்கள். அமைச்சர்கள், அதிகாரிகள் தொடர்ந்து களத்தில் இயங்கி வருகிறார்கள் என தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா கூறியுள்ளார்.

Share this story