காஷ்மீரில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை : பாதுகாப்புப்படை அதிரடி

By 
6 terrorists shot dead in Kashmir Security forces take action

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில், பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டர் தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தேடுதல் வேட்டை :

காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

அப்போது, மீர்ஹமா என்ற பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். பாதுகாப்பு படையினர் நடத்திய பதிலடி தாக்குதலில், 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

அதேபோல், காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் ஷாஹாபாத் டோரு பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே இன்று துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதில், பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 

பயங்கரவாத அமைப்பு :

இரண்டு என்கவுன்டரிலும் மொத்தம் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் அனைவரும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களாவர். 

இவற்றில், 2 பயங்கரவாதிகள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த என்கவுன்டரின் போது, பாதுகாப்பு படை வீரர்களில் சிலர் படுகாயமடைந்தனர். 

என்கவுன்டர் நடைபெற்ற பகுதியில் இருந்து, பயங்கரவாதிகள் பயன்படுத்திய அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட அதிநவீன துப்பாக்கிகள் உள்பட ஆயுதங்கள் பறிமுதல் செய்யபட்டதாக காஷ்மீர் ஐ.ஜி. விஜய்குமார் தெரிவித்துள்ளார். 
*

Share this story