சுற்றுலா பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 9 பேர் பரிதாப பலி; பிரதமர்-முதல்வர் இரங்கல்..

By 
coo

நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைப்பாதையில் 54 பயணிகளுடன் சென்ற சுற்றுலா பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 9 பேர் பலியாகியுள்ளனர்.

இதில், படுகாயமடைந்த இருவர் கோவை அரச மருத்துவமனையிலும், லேசான காயமடைந்த 42 பேர் குன்னூர் அரசு மருத்துமவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் கடையம் பகுதியிலிருந்து 57 பயணிகள் மற்றும் இரண்டு ஓட்டுநர்கள் என மொத்தம் 59 பேர் ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். ஊட்டியை சுற்றிப் பார்த்துவிட்டு சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருக்கையில், குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் 9வது கொண்டை ஊசி வளைவில் பேருந்தை திருப்ப முயன்றபோது, பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர தடுப்புச் சுவரில் மோதி நிற்காமல், 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.

விபத்துக்குள்ளான பேருந்தின் அடியில் சிக்கி உயிரிழந்த பாண்டித்தாய் என்பவரை இன்று காலை தீயணைப்புத்துறையினர் மீட்டுள்ளனர்.பேருந்தில் சிக்கியவர்களை பொதுமக்கள் உதவியுடன் மீட்டு குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குன்னூர் அரசு மருத்துவமனையில் ஐந்து பெண்கள், இரண்டு ஆண்கள், ஒரு சிறுவர் என எட்டு பேர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தனர்.விபத்துக்குள்ளான பேருந்தின் அடியில் சிக்கி உயிரிழந்த பாண்டித்தாய் என்பவரை ஞாயிற்றுக்கிழமை காலை தீயணைப்புத்துறையினர் மீட்டுள்ளனர். அவருடன் சேர்த்து மொத்தம் 9 பேர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

விபத்து தொடர்பாக 1077, 0423 2450034 என்ற இலவச எண்ணில் உறவினர்கள் தொடர்புகொள்ளலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

விபத்து நடந்த பகுதியில் 50 அடி பள்ளத்தில் ஒற்றை மரம் இல்லாவிட்டால் மற்றவர்கள் உயிர் பிழைத்திருக்க முடியாது என உயிர் பிழைத்தவர்களின் உறவினர்கள் கூறினர். விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், விபத்தில் இறந்தவர்களுக்கு மத்திய அரசு சார்பில் இரண்டு லட்சம் ரூபாயும், மாநில அரசு சார்பில் இரண்டு லட்சம் ரூபாயும் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this story