சிவப்புத்துணியை காட்டி, ரயிலை நிறுத்திய மாடு மேய்க்கும் தொழிலாளி; ஏன் தெரியுமா? 

By 
rail3

ஆந்திரா மாநிலம் திருப்பதி மாவட்டம் சூரப்பகாசம் பகுதியை சேர்ந்தவர் ரவிசங்கர். இவர், காலையில், தனது மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றார். ரேணிகுண்டா அருகே உள்ள புடி ரெயில் நிலையம் அருகே மாடுகளை ஓட்டிச்சென்றபோது, தண்டவாளத்தில் விரிசல் இருப்பதை கண்டார்.

சிறிது நேரத்தில் சென்னையில் இருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் அந்த வழித்தடத்தில் வர இருந்தது. இதனால் பதற்றம் அடைந்த அவர் கிராமத்தில் உள்ள வாலிபர்களுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக சிவப்பு நிற துணியை கொண்டு வருமாறு கூறினார்.

அவர்களும் துரிதமாக செயல்பட்டு சிவப்பு நிற துணியை கொண்டு வந்தனர். ரவி சங்கர் சிவப்பு துணியை காட்டியபடி தண்டவாள விரிசல் உள்ள இடத்தில் இருந்து ரெயில் வந்த திசையை நோக்கி சிறிது தூரம் ஓடினார். அவர்கள் எதிர்பார்த்ததை போலவே ரேணிகுண்டா ரெயில் நிலையத்திலிருந்து மும்பை-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் அதிக வேகத்தில் வந்து கொண்டு இருந்தது.

தண்டவாளத்தின் நடுவில் நின்று கொண்டிருந்த ரவிசங்கர் தன்னிடமிருந்த சிகப்பு துணியை உயர்த்தி காட்டினார். இதனைக் கண்ட ரெயில் என்ஜின் டிரைவர் ஏதோ ஆபத்து உள்ளதாக கருதி உடனடியாக ரெயிலை நிறுத்தினார்.

இதுகுறித்து புடி ரெயில் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தண்டவாள விரிசலை சரி செய்தனர். இதையடுத்து தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்ட இடத்தில் ரெயில்கள் மெதுவாக இயக்கப்பட்டன.

ரவிசங்கர் மட்டும் விரிசலை கண்டுபிடித்து சென்னை ரெயிலை நிறுத்தாமல் இருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்பட்டு இருக்கும். துரிதமாக செயல்பட்டு ரெயிலை நிறுத்திய ரவிசங்கர் மற்றும் அவரது நண்பர்களை ரெயில்வே அதிகாரிகள் பாராட்டினர்.

Share this story