டெல்லி இளம்பெண் மரணத்தில் திருப்பம் : தோழி பரபரப்பு தகவல்..
 

delhiwomen

டெல்லி கஞ்சவாலா பகுதியில் புத்தாண்டு தினத்தன்று அதிகாலையில் ஸ்கூட்டி மீது கார் மோதியதில், ஸ்கூட்டியில் சென்ற அஞ்சலி என்ற இளம்பெண், 13 கி.மீ. தூரம் காரில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.

நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 நபர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களில் 2 பேர் குடிபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, அஞ்சலி ஸ்கூட்டியில் தனியாக வரவில்லை. அவருடன் அவரது தோழி ஒருவரும் வந்தார் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. அஞ்சலி ஸ்கூட்டியை ஓட்ட அவர் தோழி பின் இருக்கையில் அமர்ந்திருக்கிறார். கார் மோதியபோது ஸ்கூட்டி நிலைதடுமாறிய நிலையில் அஞ்சலி சாலையில் விழுந்துள்ளார். இதனால் அவர் மீது கார் ஏறியுள்ளது.

அதே சமயத்தில் ஸ்கூட்டியின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த அவரது தோழி இடது பக்கமாக சரிந்து விழுந்ததால் காயங்களுடன் தப்பி உள்ளார். தன் கண் எதிரே தோழி பலியானதால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அலறியபடியே தப்பி ஓடிவிட்டார்.

அஞ்சலியின் தோழியை நேற்று மாலை டெல்லி போலீசார் கண்டுபிடித்தனர். அவரை தனி இடத்தில் வைத்து விசாரித்தனர். அப்போது அவர் காரில் வந்தவர்கள் அதிக சத்தத்துடன் பாட்டு கேட்டுக் கொண்டே வந்ததாகவும், அவர்களது கார் எதிர்பாராத விதமாக ஸ்கூட்டியின் மீது மோதி விபத்து ஏற்பட்டதாகவும் கூறி உள்ளார்.

மேலும் விபத்து நடந்தபோது அஞ்சலி மதுபோதையில் இருந்ததாக அவரது தோழி, ஏஎன்ஐக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். விபத்தில் சிக்கியபோது பயந்துவிட்டதால் போலீசாரிடம் தகவல் சொல்லவில்லை எனவும் கூறியிருக்கிறார்.

அஞ்சலி போதையில் இருந்ததால் வாகனத்தை ஓட்டவேண்டாம் என்று வலியுறுத்தியதாகவும், அதையும் மீறி வாகனத்தை ஓட்டியதாகவும் தோழி குறிப்பிட்டார். விபத்தை நேரில் பார்த்த சாட்சியான தோழி கொடுத்த இந்த தகவல், வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

Share this story