மத்திய அரசின் அறிவுரையின்படி, தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணி நடவடிக்கை.. 

By 
ma.subra

கொரோனா பரவல் மீண்டும் வெளிநாடுகளில் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை அமல்படுத்தும்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டது.

தமிழகத்தில் எடுக்கப்போகும் அவசர கால ஒத்திகை பற்றி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

கடந்த ஆண்டு தி.மு.க. ஆட்சி பொறுப்புக்கு வந்தபோது, கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. எதிர்காலத்தில் அப்படி ஒரு சூழல் வந்தால் எதிர்கொள்ளும் அளவுக்கு மருத்துவ கட்டமைப்புகளை உருவாக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

தற்போது தமிழகத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் மட்டும் 1.25 லட்சம் படுக்கைகள் உள்ளன. இதில் 72 ஆயிரம் படுக்கைகள் கொரோனா சிகிச்சைக்காக பிரத்யேகமாக தயார் செய்யப்பட்டது. 2021-ல் 200 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தயாரிக்கும் அளவுக்குத்தான் வசதிகள் இருந்தன. இப்போது 2 ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்சிஜன் தயாரிக்கும் வகையில் கட்டமைத்து தயார் நிலையில் உள்ளது.

3 மாதங்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள் கையிருப்பில் உள்ளன. மருத்துவ துறைகளுக்கு தேவைப்பட்ட கவச உடை, முககவசங்கள் அனைத்தும் தயாராக உள்ளது. தற்போது சீனா, ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா, தைவான் ஆகிய 5 நாடுகளில் இருந்து வருபவர்கள் முழு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

மற்ற நாடுகளில் இருந்து வருபவர்கள் ரேண்டமாக பரிசோதிக்கப்படுவார்கள். மத்திய அரசின் அறிவுரையின்படி நாளை காலை 10 மணி முதல் 12 மணி வரை அனைத்து அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் படுக்கை வசதி, ஆக்சிஜன் கையிருப்பு, தயாரிக்கும் வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும்.

இதுபற்றிய அறிக்கையை 12 மணிநேரத்துக்குள் அரசுக்கு அனுப்ப வேண்டும். ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் நாளை காலையில் நானே ஆய்வு நடத்த உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Share this story