2,400 நர்சுகள் நியமனம் : தமிழக சுகாதாரத்துறை தகவல்

nurse

கொரோனா காலத்தில் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்ததால் ஒப்பந்த அடிப்படையில் நர்சுகளை தேர்வு செய்து கொள்ள தேசிய சுகாதார குழுமம் அனுமதி அளித்தது. அதன் பேரில் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் நர்சுகளை தேர்வு செய்தது.

மொத்தம் 2,400 நர்சுகள் தேர்வு செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகள், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் பணியாற்றி வருகிறார்கள். இவர்களின் பணிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. இனி பதவி நீட்டிப்பு இல்லை என்று கூறப்பட்டது. இது நர்சுகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

கொரோனா கால நெருக்கடியை சமாளிக்க தேசிய சுகாதார குழுமத்தின் வழி காட்டுதல்படி ஒப்பந்த அடிப்படையில் நர்சுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இடஒதுக்கீடு உள்ளிட்ட அரசு விதிமுறைகளை அ.தி.மு.க. அரசு முறையாக கடைபிடிக்காமல் நர்சுகள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளன. இதுவே சிக்கலுக்கு காரணம்.

இனிமேல் பதவி நீட்டிப்பு வழங்க கூடாது என்று நிதித்துறை அறிவுறுத்தி இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் 2,400 நர்சுகள் இருக்கிறார்கள். அவர்களின் வாழ்வாதாரம், குடும்ப சூழல் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இந்த விவகாரத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு எடுத்து சென்றோம்.

அவரது ஆலோசனையின் பேரில் இந்த நர்சுகளை நீக்காமல் துறை பணியில் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேவைக்கு ஏற்ப முன்னுரிமை அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள். சம்பளத்தை பொறுத்தவரை என்.எச்.எம். விதிமுறைப்படி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

Share this story