14,000 இடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் : தமிழக அரசு உத்தரவு

By 
teachers

பள்ளிக்கல்வி, தொடக்கக் கல்வி துறையின் கீழ் உள்ள 4,989 இடைநிலை ஆசிரியர்கள், 5,154 பட்டதாரி ஆசிரியர்கள், 3,876 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 14 ஆயிரத்து 19 காலிப் பணியிடங்கள் இருக்கின்றன. 

இந்த பணியிடங்கள் நேரடி நியமனம், பதவி உயர்வு மூலம் நிரப்பப்படும் வரை மாணவ-மாணவிகளின் கல்வி நலன் கருதி, பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்வது தொடர்பாக சமீபத்தில் கல்வித்துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

அதன்படி, தற்காலிகமாக நியமனம் செய்யப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.12 ஆயிரம், பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.15 ஆயிரம், முதுகலை ஆசிரியர்களுக்கு ரூ.18 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

அந்த வகையில் பள்ளி மேலாண்மை குழு மூலம் காலியாக உள்ள 14 ஆயிரத்து 19 ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு அனுமதி அளித்தும், ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் வழங்குவதற்காக ரூ.109 கோடியே 91 லட்சத்து 52 ஆயிரம் நிதிக்கு ஒப்பளிப்பு செய்தும் பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா அரசாணை பிறப்பித்து இருக்கிறார்.

Share this story