பூஸ்டர் தடுப்பூசி இலவசம் : மத்திய அரசு புதிய தகவல் வெளியீடு

By 
booster

இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றை எதிர்கொள்ள, கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் போடப்படுகின்றன. 

கடந்த ஆண்டு ஜனவரி 16-ந்தேதி தொடங்கிய தடுப்பூசி திட்டம் பல்வேறு கட்டங்களாக விரிவுபடுத்தப்பட்டது. 

தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. 

இதேபோல், 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முன் எச்சரிக்கை டோஸ் என்ற பெயரில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது. ஏப்ரல் 10-ம்தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், பூஸ்டர் டோஸ் செலுத்தப்படுகிறது. 

இரண்டாவது டோஸ் செலுத்திய பிறகு பூஸ்டர் டோஸ் செலுத்துவதற்கான இடைவெளி 9 மாதங்களில் இருந்து 6 மாதமாக குறைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், வரும் 15-ம் தேதி முதல் 18 வயது முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கு பூஸ்டர் டோஸ் இலவசம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அரசு தடுப்பூசி மையங்களில் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ளலாம். 

நாட்டின் 75வது சுதந்திர தின நிறைவு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 18 வயது முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கு, ஜூலை 15-ம் தேதியில் இருந்து 75 நாட்களுக்கு பூஸ்டர் டோஸ் இலவசம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

இதுபற்றி அமைச்சர் அனுராக் தாகூர் கூறுகையில், "நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிறது. 

இந்த கொண்டாட்டத்திபோது, ஜூலை 15ம் தேதி முதல் அடுத்த 75 நாட்கள் வரை, 18 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களுக்கு பூஸ்டர் டோஸ் இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது' என்றார். 

அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி இந்திய மக்கள் தொகையில் 96 சதவீதம் பேர் முதல் தவணையும், 87 சதவீதம் பேர் இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர். 

18 வயது முதல் 59 வயதுக்குட்பட்ட 77 கோடி மக்களில் 1 சதவீதத்திற்கும் குறைவான நபர்களே பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் மொத்தம் 16 கோடி பேர் பூஸ்டர் டோஸ் செலுத்த தகுதி வாய்ந்தவர்கள். 

இவர்களில் 26 சதவீதம் பேர் பூஸ்டர் டோஸ் செலுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
*

Share this story