கல்லூரி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் : முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

stalinji2

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் தமிழக அரசால் தொடங்கப்பட்டது.

இதன் அடுத்த கட்டமாக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கும், காலை சிற்றுண்டி திட்டம் வழங்க முடிவு செய்யப்பட்டது.

பழனி தண்டாயுதபாணி சாமி கோவில் கட்டுப்பாட்டின்கீழ் பழனியாண்டவர் கலைகல்லூரி, மகளிர் கல்லூரி, சின்னகலையம்புத்தூர் கல்லூரி, மெட்ரிக் பள்ளி ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இதுதவிர ஒட்டன்சத்திரத்தில் அரசு கல்லூரியும் செயல்பட்டு வருகிறது.

இந்த கல்லூரிகளில் சுமார் 7000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் முதற்கட்டமாக 4200 மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி மூலம் திறந்து வைத்தார்.

பழனி கல்லூரியில் இதனை திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன் தொடங்கி வைத்து மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டியை வழங்கினார்.

நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் நடராஜன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டியாக இட்லி, பொங்கல், கேசரி வழங்கப்பட்டது. இத்திட்டத்திற்கு மாணவ-மாணவிகள் மிகுந்த வரவேற்பு தெரிவித்தனர்.
 

Share this story