புயல் உருவாக வாய்ப்பு? : வானிலை மையம் தகவல்

By 
cyclone1

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று நேற்று உருவானது. இது தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை கடலோர பகுதிகளை ஒட்டி நிலவி வருகிறது.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று தமிழகம், புதுவை கடற்கரையை நோக்கி நகரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக இன்று வலுவடைந்தது.

இதனால் தமிழகத்தில் வருகிற 14-ந்தேதி வரை பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை உள்ளிட்ட வட தமிழக கடலோர பகுதிகளில் இன்று அதிகனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு இல்லை என்றும் அது மேலும் வலு குறைந்து கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் தமிழகம், புதுச்சேரி நோக்கி நகர்ந்து வருகிறது.

மேலும், தமிழகத்தில் உள்ள டெல்டா மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு அதிகனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும்.

சென்னை மற்றும் புறநகரில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 21 இடங்களில் கனமழை பெய்துள்ளது என வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும், குமரிக்கடல், தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Share this story