இன்று 75 நகரங்களில் வலம் வருகிறது, செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் : பிரதமர் மோடி தொடங்கி வைப்பு..
 

chess10

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ந் தேதி முதல் ஆகஸ்ட் 10-ந் தேதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடக்கிறது. 

1927-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் புகழ் பெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் முதல் முறையாக நடைபெற உள்ளது. 

இந்தப்போட்டியில் 189 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். ஓபன் மற்றும் பெண்கள் பிரிவில் போட்டி நடக்கிறது. 

இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவதையொட்டி ஒலிம்பிக் பாரம்பரியம் போன்று சுடர் தொடர் ஓட்டம் நடத்தப்படும் என்று சர்வதேச செஸ் கூட்டமைப்பு ஏற்கனவே அறிவித்து இருந்தது. 

செஸ் உருவான இந்தியாவில் இருந்து ஜோதி ஓட்டம் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்படுகிறது. அனைத்து கண்டங்களுக்கும் இந்த ஜோதி ஏந்தி செல்லப்படும். 

ஆனால், தற்போது கால அளவு குறைவாக இருப்பதால் இந்தியாவில் மட்டும் சுடர் ஓட்டம் நடக்கிறது. செஸ் ஒலிம்பியாட்டின் வரலாற்று சிறப்புமிக்க முதல் சுடர் ஓட்டம் டெல்லியில்  இன்று 9-ந் தேதி தொடங்குகிறது. 

இந்திராகாந்தி மைதானத்தில் மாலை 5 மணியளவில் இந்த ஜோதி ஓட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். 

முன்னதாக, சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவர் டிவோர்கோவிச் முறைப்படி ஜோதியை பிரதமர் மோடியிடம் ஒப்படைக்கிறார். அதை அவர் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்திடம் ஒப்படைப்பார். 

செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடர் ஓட்டம் 40 நாட்கள் இந்தியாவில் உள்ள 75 நகரங்களில் வலம் வருகிறது. ஜூலை 27-ந் தேதி போட்டி நடைபெறும் மாமல்லபுரத்தை வந்தடையும்.
*

Share this story