போலீஸ் அதிகாரிகளுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் முக்கிய உத்தரவு

By 
policenews

தமிழ்நாட்டில் போதைப் பொருட்களின் நடமாட்டத்தையும், பயன்பாட்டையும் முற்றிலுமாக ஒழிக்க தமிழக அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. ஆனாலும் கஞ்சா, பான்பராக், குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை பக்கத்து மாநிலங்களில் இருந்து கடத்தி வந்து ஒவ்வொரு பகுதியிலும் சிலர் விற்பனை செய்து வருகின்றனர்.

போலீசார் அவ்வப்போது அத்தகைய நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தாலும் மீண்டும் மீண்டும் போதை பொருட்கள் நடமாட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

ஆட்சிப் பொறுப்பேற்றது முதற்கொண்டு போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு கண்டிப்பான உத்தரவுகளையும் பிறப்பித்து இருந்தார். ஆனாலும் போதை பொருட்கள் விற்பனை இன்னும் சில பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளது.

இதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்டு மாதம் 10-ந்தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற மாவட்ட கலெக்டர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் கூட்டத்தில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போதைப் பொருட்களை கட்டுப்படுத்த நீங்கள் நடவடிக்கை எடுத்து வந்தாலும் அது போதாது. இன்னும் தீவிரமாக நடவடிக்கை எடுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

போதைப் பொருள் பயன்பாட்டின் ஆபத்து குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 11-ந்தேதியை போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நாளாக தேர்ந்தெடுத்து உள்ளோம். அதன்படி பள்ளி, கல்லூரிகளில் இது தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.

அதன்படி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் போதையின் தீமைகள் குறித்த காணொலி காட்சிகளும் பல இடங்களில் காண்பிக்கப்பட்டது. போதைப் பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்க ஒவ்வொருவரும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றும் அப்போது கேட்டுக்கொண்டார்.

இதைத் தொடர்ந்து போதைப் பொருட்கள் கடத்துபவர்கள், விற்பவர்களை பிடித்து குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து வந்தனர். இந்த சூழலில் ராமநாதபுரம் மாவட்டம் வேதாளையில் கிலோ கணக்கில் கோகைகன் போதைப்பொருள் பிடிபட்டதாக அண்மையில் தகவல் வெளியானது.

இலங்கையில் இருந்து சர்வதேச போதைப் பொருள் கடத்தல் தாதா கஞ்சிபாணி இம்ரான் தமிழகத்திற்குள் ஊடுருவியதாகவும் ராமேசுவரத்துக்கு கள்ளத்தோணியில் தப்பி வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதைத் தொடர்ந்து கடலோர பகுதிகள் முழுவதும் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த சூழ்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை மேற்கொண்டார்.

இதில் தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி, இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் முதன்மை செயலாளர் அதுல்யமிஸ்ரா, போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், மருத்துவ துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா, உயர்கல்வி துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை முதன்மை செயலாளர் கன்சோங்கம் ஜடக்சிரு மற்றும் உளவு பிரிவு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இது தவிர கடலோர மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளும், ஐ.ஜி.க்களும் காணொலி வாயிலாக கூட்டத்தில் இணைந்திருந்தனர். இவர்கள் மத்தியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விரிவாக பேசினார். தமிழ்நாடு முழுவதும் சோதனை நடத்தி போதைப் பொருள் நடமாட்டத்தை வேரோடு ஒழிக்க பாடுபட வேண்டும். போதைப் பொருள் கடத்தல்காரர்களை கண்டுபிடித்து கைது செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார்.

Share this story