பிரதமர் மோடிக்கு, காங்கிரஸ் முதலமைச்சர் புகழாரம்..

 

ashok

இந்தியாவில் ஆங்கிலேய காலனி ஆட்சியின்போது, அவர்களுக்கு எதிராக சுதந்திரம் கோரி தீரமுடன் போரிட்டவர்களில் பில் எனப்படும் பழங்குடியின சமூகத்தினரும் அடங்குவார்கள்.

இந்த நிலையில், 1913-ம் ஆண்டு நவம்பர் 17-ல் மங்கார் என்ற மலை பகுதியில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் மற்றும் ஆண்கள் என பில் பழங்குடியினரை சுற்றி வளைத்த பிரிட்டிஷ் படைகள் கொடூர தாக்குதலை நடத்தின.

இந்த சம்பவத்தில் 1,500-க்கும் மேற்பட்ட பழங்குடியினர் படுகொலை செய்யப்பட்டனர். 1913-ம் ஆண்டு நடந்த மங்கார் படுகொலையை நினைவுகூரும் வகையில், மங்கார் தம் கி கவுரவ் கதா என்ற பெயரில் ராஜஸ்தானின் பன்ஸ்வாரா பகுதியில் நிகழ்ச்சி ஒன்று இன்று நடந்தது.

இதில், பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜஸ்தான் முதல்-மந்திரியான அசோக் கெலாட், மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் மற்றும் குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர பட்டேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய கெலாட், பிரதமர் மோடி வெளிநாட்டுக்கு செல்லும்போது, அவருக்கு சிறந்த முறையில் கவுரவம் அளிக்கப்படுகிறது. ஏனென்றால், ஜனநாயகம் ஆழ வேரூன்றிய, காந்தியின் தேசத்தில் பிரதமராக உள்ளவர் வந்திருக்கிறார் என்பதற்காக. இதனை உலக நாடுகள் உணரும்போது, அந்த நாட்டில் இருந்து பிரதமர் ஒருவர் வருகிறார் என அவர்கள் பெருமையாக உணருகின்றனர் என்று கெலாட் பேசியுள்ளார்.

பிரிட்டிஷ் படையால் பில் பழங்குடியினர் ஆயிரத்து 500-க்கும் கூடுதலானோர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டதன் நினைவாக ராஜஸ்தானின் பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ள மங்கார் தம் என்ற பகுதியை நினைவு சின்னம் ஆக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

Share this story