1,191 ஏக்கர் நிலத்தை மீட்க, ஐகோர்ட் உத்தரவு..

aadheenam

சென்னையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அவர் தனது மனுவில்,

'மதுரை ஆதினம் மடம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த மடத்திற்கு சொந்தமான தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சொத்துக்கள் இருக்கிறது. இதன் தற்போதைய மதிப்பு பல 100 கோடி ரூபாய் ஆகும்.

இந்நிலையில் 2008 ஆம் ஆண்டு இருந்த மதுரை ஆதினம் அருணகிரிநாதர் தரப்பில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா மற்றும் மதுரை விமான நிலையம் அருகில் உள்ள 1191 ஏக்கர் நிலங்களை புதுச்சேரியை சார்ந்த தனியார் நிறுவனத்திற்கு 99 வருட ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. கோயில் நிலங்களை எல்லாம் 99 வருட ஒப்பந்தம் தான் செய்யமுடியும்.

இதை வைத்து 2018 ஆம் ஆண்டு பத்திரப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதாவது அந்த ஒப்பந்ததை காண்பித்து போலியாக பத்திரப்பதிவு செய்திருக்கிறார்கள். இது சட்ட விரோதமானது. ஆதின மடங்களுக்கு சொந்தமான சொத்தை தனியாருக்கு விற்பனை செய்ய முடியாது என்ற சட்டம் இருக்கிறது.

மேலும் நீதிமன்ற தீர்ப்புகளும் இருக்கிறது. ஆகவே உரிய நடவடிக்கை எடுத்து இந்த ஒப்பந்தங்களை எல்லாம் ரத்து செய்து ஆதின மடத்திற்கு சொந்தமான சொத்துக்களை எல்லாம் மீட்க வேண்டும்' என்று கூறியிருந்தார். இந்த மனுவானது நீதிபதிகள் மகாதேவன் சத்திய நாராயண பிரசாத் கொண்ட அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தற்போதைய 293வது ஆதினமான ஞானசம்பந்தர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அருண் சாமிநாதன், அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில் 'மறைந்த 292வது ஆதினம் இருந்தபோது இந்த ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. தற்போது இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்தவர்கள் வெளியேற மறுக்கிறார்கள். அவர்கள் பணபலம் மிக்கவர்கள்.

எனவே நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என கேட்டிருந்தார். இதனை தொடர்ந்து வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள். மதுரை ஆதின மடத்திற்கு சொந்தமான 1191 ஏக்கர் நிலத்தை மீட்க இந்து சமய அறநிலையத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். நிலத்தை மீட்பதற்கு காவல் துறையினர் போதிய பாதுகாப்பை வழங்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Share this story