ரூ.14,850 கோடியில் விரைவுச்சாலை : பிரதமர் மோடி திறந்து வைத்தார்

By 
modiroad

உத்தரபிரதேச மாநிலம், சித்தரகூட மாவட்டத்தில் இருந்து எட்டாலா மாவட்டம் வரை 296 கிலோ மீட்டருக்கு புந்தேல்கண்ட் விரைவு சாலை ரூ.14,850 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த விரைவுச் சாலையை இன்று பிரதமர் மோடி திறந்து வைத்தார். 

இதற்காக மோடி உத்தரப் பிரதேசத்தில் கான்பூர் நகருக்கு விமானத்தில் சென்றார். அவரை விமான நிலையத்தில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். 

பின்னர் ஜலான் மாவட்டம் கைந்தேரி கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மோடி, புந்தேல்கண்ட் விரைவுச் சாலையை தொடங்கி வைத்தார். 

இந்த விரைவுச்சாலை பணிக்கு கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 29 மாதங்களில் பணிகள் முடிக்கப்பட்டு விரைவுச் சாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

நான்கு வழி கொண்ட புந்தேல்கண்ட் விரைவுச் சாலை சித்தரகூடம், பண்டா, மகோபா, ஹமீர்பூர், ஜலான், அவ்ரையா, எட்டாவா ஆகிய ஏழு மாவட்டங்கள் வழியாக செல்கிறது. 

இந்த சாலை ஆறு வழிச்சாலையாக விரிவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த பிராந்தியத்தில், போக்குவரத்து தொடர்பை மேம்படுத்தும் புந்தேல்கண்ட் விரைவுச்சாலை பொருளாதார வளர்ச்சிக்கும் பெருமளவு ஊக்கமளிக்கும். 

இதன் விளைவாக உள்ளூர் மக்களுக்கு ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்பு உருவாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
*

Share this story