4-ந்தேதி முதல், 3-வது தவணையாக சொட்டு மருந்து : தமிழக சுகாதாரத்துறை ஏற்பாடு

4th

தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் போலியோ 3-வது தவணை தடுப்பூசி வழங்கும் திட்டம் தமிழகத்தில் வரும் 4-ந்தேதி தொடங்கப்பட உள்ளதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் தெரிவித்தார்.

அதன்படி அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் அவர் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- சுகாதார திட்டங்களை செயல்படுத்துவதில் முதன்மை மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது.

குறிப்பாக குழந்தைகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆண்டுக்கு 10 லட்சம் கர்ப்பிணிகளுக்கும் 9 லட்சம் குழந்தைகளுக்கும் தடுப்பூசிகள் தமிழகத்தில் வழங்கப்பட்டு வருகின்றன. பிறந்த குழந்தைகளுக்கு இரு தவணைகளாக 6-வது வாரத்திலும், 14-வது வாரத்திலும் போலியோ தடுப்பூசி வழங்கப்படுகிறது.

இதை தவிர போலியோ இல்லாத மாநிலமாக தமிழகம் உருவெடுத்தாலும் முன் எச்சரிக்கையாக பிறந்த குழந்தைகளுக்கு 9-ல் இருந்து 12 மாதங்களுக்குள் 3-ம் தவணையாக போலியோ சொட்டு மருந்து வழங்க மத்திய அரசு முடிவு செய்தது.

அதன் அடிப்படையில் தமிழகத்தில் வரும் 4-ந்தேதி முதல் வழக்கமான தடுப்பூசிக்காக வரும் குழந்தைகளுக்கு தகுதியின் அடிப்படையில் 3-ம் தவணை போலியோ சொட்டு மருந்து வழங்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மாவட்ட சுகாதார அலுவலர்கள் முன்னெடுக்க வேண்டும் இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share this story