இலங்கைக்கு தமிழக அரசு உதவி : மத்திய அரசின் நிலைப்பாடு என்ன?

By 
lanka2

இலங்கைத் தமிழர்களுக்குத் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து உணவுத் தானியங்கள், காய்கறிகள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அனுப்புவதற்கு உரிய வசதியை செய்து தருமாறும், 

யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வதற்குத் தேவையான சட்டப்பூர்வ உதவிகளை மேற்கொள்ளுமாறும் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

இலங்கையில் தற்போது நிலவும் மோசமான பொருளாதார நிலைமையைக் கருத்தில் கொண்டு, விரைவில் பொருட்களை அனுப்புவதற்கான வசதியை செய்து தருமாறு முதலமைச்சர் கேட்டுக் கொண்டார். 

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினுக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதில் கடிதம் அனுப்பி உள்ளார்.

 அதில், இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்க அனுமதி அளிக்கப்படுவதாகவும், பொருட்களை மத்திய அரசு மூலம் அனுப்பலாம் என்றும்  கூறியுள்ளார். 

தமிழக அரசு விரும்பினால், இலங்கையில் பொருட்களை விநியோகம் செய்யும் பணிகளை ஒருங்கிணைக்க தலைமைச் செயலாளரை அனுப்பி வைக்கலாம் என்றும் ஜெய்சங்கர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Share this story