தமிழகத்தில், மின் கட்டணம் இரு மடங்கு உயர்வு; பொதுமக்கள் அதிர்ச்சி : முழு விவரம்..

power4

தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் மின்கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டது. அதை தொடர்ந்து மின் இணைப்பு பெறுதல் மற்றும் சேவை கட்டணங்களும் உயர்த்தப்பட்டு உள்ளது.

மின்கம்பங்கள் வழியாகவும், தரைக்கு அடியில் கேபிள் வழியாகவும் மின்சப்ளை செய்யப்படும் பகுதிகளில் கட்டணங்கள் மாறுபடும். வளர்ச்சி கட்டணம், பதிவு கட்டணம், இணைப்பு கட்டணம், மீட்டர் காப்பீடு கட்டணம் ஆகிய கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி புதிய கட்டண உயர்வு விபரம் வருமாறு:-

பழைய கட்டணம் அடைப்பு குறிக்குள் குறிப்பிடப்பட்டுள்ளது. பதிவு கட்டணம்-ரூ.200 (ரூ.100), இணைப்பு கட்டணம்-ரூ.1000 (ரூ.500), மீட்டர் காப்பீடு-ரூ.750 (ரூ.600), வளர்ச்சி கட்டணம்-ரூ.2,800 (ரூ.1400), வைப்புத் தொகை ரூ.300 (ரூ.200), மொத்தம் ரூ.5050 (ரூ.2800) அதாவது ரூ.2 ஆயிரத்து 250 உயர்த்தப்பட்டுள்ளது.

மும்முனை மின் இணைப்பு பெறுவதாக இருந்தால் ரூ.6600 செலுத்த வேண்டும். பழைய கட்டணம் ரூ.5,150. அதாவது ஆயிரத்து 450 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது. பூமிக்கு அடியில் கேபிள் வழியாக மின் விநியோகம் நடைபெறும் பகுதிகளில் ஒரு முனை மின் இணைப்புக்கு பதிவுகட்டணம் ரூ.200 (ரூ.100),

இணைப்பு கட்டணம் ரூ.1000 (ரூ.500), மீட்டர் காப்பீடு ரூ.750 (ரூ.600), வளர்ச்சி கட்டணம் ரூ.7000 (ரூ.5000), வைப்புத் தொகை ரூ.300 (ரூ.200), மொத்தம் ரூ.9,250 செலுத்த வேண்டும்.

பழைய கட்டணம் ரூ.6,400. அதாவது ரூ.2,850 உயர்த்தப்பட்டு உள்ளது. மும்முனை மின் இணைப்பு கட்டணம் ரூ.9,600 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. பழைய கட்டணம் ரூ.6,650 தான். அதாவது 2 ஆயிரத்து 950 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது. ஆளில்லாமல் மின் பயன்பாட்டை கணக்கிடும் ஸ்மார்ட் மீட்டர் விரைவில் பொருத்தப்பட உள்ளது. அவ்வாறு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தியதும் ஒரு முனை மின் இணைப்புக்கு மீட்டர் வைப்புத் தொகையாக கூடுதலாக ரூ.5,200 வசூலிக்கப்படும்.

மும்முனை மின் இணைப்பாக இருந்தால் ரூ.7,100 கூடுதலாக வசூலிக்கப்படும். வீடுகளை உள்ளடக்கிய தாழ்வழுத்த மின் விநியோக பகுதியில் மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்யும் கட்டணம் ரூ.300-ல் இருந்து ரூ.600 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. மீட்டர் பழுதானாலோ, எரிந்து போனாலோ மீட்டரை மாற்றும் கட்டணம் ஒரு முனை மின் இணைப்புக்கு ரூ.500-ல் இருந்து ரூ.1000 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

மும்முனை மின் இணைப்புக்கு ரூ.750-ல் இருந்து ரூ.1500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உயர் அழுத்தப் பிரிவில் மின் இணைப்பு பெயர் மாற்றுவதற்கான கட்டணம் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது.

நல்ல நிலையில் இருக்கும் ஒரு முனை மின் இணைப்பு மீட்டரை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்தில் மாற்றி வைப்பதற்கான கட்டணம் ரூ.500-ல் இருந்து ரூ.1000 ஆகவும், மும்முனை இணைப்புக்கு ரூ.750-ல் இருந்து ரூ.1500 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

எரிந்தோ பழுதுபட்டோ போகும் மின் மீட்டர்களை மாற்றுவதற்கான கட்டணம் ஒருமுனை மின் இணைப்புக்கு ரூ.500-ல் இருந்து ரூ.1000 ஆகவும், மும்முனை இணைப்புக்கு ரூ.750-ல் இருந்து ரூ.1500 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. தற்காலிகமாக மின் இணைப்பை இடம் மாற்றி வைப்பதற்கான கட்டணமும் ரூ.300-ல் இருந்து ரூ.600 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மொத்தத்தில் மின் வாரியம் கையாளும் அனைத்து விதமான சேவைகளின் கட்டணமும் இருமடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது.

Share this story