உத்திரமேரூரில் உள்ள கல்வெட்டுகள், உலகம் முழுவதையும் வியக்க வைக்கிறது : பிரதமர் மோடி பெருமிதம்
 

culture2

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மன் கீ பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்கள் இடையே உரையாற்றி வருகிறார். அவரது 97-வது மன் கீ பாத் நிகழ்ச்சி இன்று ரேடியோவில் ஒலிபரப்பானது.

இந்த ஆண்டின் முதல் மனதின் குரல் நிகழ்ச்சியாகும். நாட்டு மக்கள் இடையே பிரதமர் மோடி உரையாடியதாவது:-

உலகின் மிக பெரிய ஜனநாயக நாடு இந்தியாவாகும். நமது நாடு ஜனநாயகத்தின் தாய் என்பதில் நாம் பெருமை கொள்கிறோம். இந்திய கலாசாரத்தில் ஜனநாயகம் உள்ளது. ஜனநாயகம் என்பது நமது நரம்புகளிலும், நமது கலாசாரத்திலும் உள்ளது.

இது பல நூற்றாண்டுகளாக நமது செயல்பாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கிறது. இந்தியாவின் உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீடு மேம்பட்டுள்ளது. உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டில் இந்தியா சிறந்த இடத்தை பெறுவதில் முன்னேற்றம் அடைந்துள்ளது.

நக்சலைட்டுகளால் பாதித்த பகுதிகளில் தவறான பாதையில் செல்லும் இளைஞர்களுக்கு தங்கள் முயற்சியால் சரியான பாதையை காட்டுபவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்படுகிறது. இந்த ஆண்டு பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் உள்ள கல்வெட்டுகள் உலகம் முழுவதையும் வியக்க வைக்கிறது. உத்திரமேரூரில் 1,100-1,200 ஆண்டுகளுக்கு முந்தைய அரசியலமைப்பு குறித்த கல் வெட்டு உள்ளது. கிராம சபை எப்படி நடத்த வேண்டும் என்றும், அதில் உறுப்பினர்கள் தேர்ந்து எடுக்கும் செயல்முறை எப்படி இருக்க வேண்டும் என்றும் இதில் விளக்கப்பட்டுள்ளது.

மின்சாதனப் பொருட்களை, அதன் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் 5 கோடி டன் மின்சாதன கழிவுகள் தூக்கி வீசப்படுவதாக ஐ.நா. தெரிவிக்கிறது. மின் கழிவுகளில் இருந்து சுமார் 17 வகையான விலை மதிப்பற்ற உலோகங்களை பிரித்தெடுக்க முடியும்.

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் பறவைகளின் எண்ணிக்கையை பாதுகாத்த முழு பெருமையும் அக்கம் பக்கத்தில் உள்ள விவசாயிகளை சேரும். இவ்வாறு மோடி பேசினார். 

Share this story