சர்வதேச திரைப்பட விழா; இன்று தொடக்கம்; முழு விவரம்..

53rd

மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் சார்பில் கோவாவில் இன்று  தொடங்கி வரும் 28-ந்தேதி வரை 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நடைபெறுகிறது.

இந்த விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த கதை அம்சம் கொண்ட 25 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இதில் தமிழில் ஞானவேல் இயக்கி சூர்யா நடிப்பில் வெளிவந்த ஜெய்பீம், எஸ்.கமலக்கண்ணன் இயக்கிய குரங்கு பெடல் மற்றும் ரா.வெங்கட் இயக்கிய கிடா ஆகிய மூன்று படங்களும் இடம் பெறுகின்றன.

ராஜமவுலி இயக்கத்தில் உருவான ஆர்.ஆர்.ஆர்.திரைப்படமும் இதில் கலந்து கொள்கிறது. மேலும் ரிச்சர்ட் அட்டன்பரோவின் ஆஸ்கார் விருது பெற்ற காந்தி, அனந்த் நாராயண் மகாதேவன் இயக்கிய தி ஸ்டோரிடெல்லர் ஆகிய படங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கான பிரிவில் ஆடியோ விளக்கங்கள் மற்றும் வசனங்களுடன் திரையிடப்படுகின்றன.

இந்த விழாவில் பங்கேற்கும் மாற்று திறனாளிகளுக்கு உதவும் வகையில் திரைப்படங்கள் திரையிடப்படும் இடங்களின் வளாகங்கள், சரிவுகள், கைப்பிடிகள், தொட்டுணரக் கூடிய நடைபாதைகள், வாகன நிறுத்துமிடங்கள், மறுசீரமைக்கப்பட்ட கழிவறைகள், பிரெய்லி வழிகாட்டு பலகைகள் உள்ளிட்ட வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

மேலும் திரைப்படக் கலை, சினிமா மற்றும் அழகியல் தொடர்பான தொழில்நுட்பத்தை பறைசாற்றும் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 21 முதல் 27 வரை காலை 11 மணி முதல் மாலை 7 மணி வரை கோவாவில் உள்ள கலா அகாடமிக்கு அருகே கால்பந்து மைதானத்தில் இந்த கண்காட்சி நடைபெறுகிறது.

கண்காட்சியில் மொத்தம் 20 அரங்குகள் இடம்பெறும். சமகால சினிமா தயாரிப்பில் தொழில்நுட்ப வல்லுனர்களால் பயன்படுத்தப்படும் அதிநவீன உபகரணங்கள் இங்கு காட்சிப்படுத்தப்படும்.

இந்நிலையில் 53-வது இந்திய சர்வதேச திரைப்படவிழாவில் பங்கேற்பவர்களுக்கு மறக்கமுடியாத அனுபவம் கிடைக்கும் என்று மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல். முருகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Share this story