காதல் சதிராட்டம் : காதலிக்காக, நண்பரை கொன்ற டிரைவர்..

murder

கடலூர் மாவட்டம் பண்ருட்டி தட்டாஞ்சாவடி காந்திநகர் காலனியை சேர்ந்தவர் சக்திவேல். ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகிவிட்டது. நேற்று காலை சக்திவேல் தட்டாஞ்சாவடி காளிக்கோவில் பின்புறம் சுடுகாட்டு பகுதியில் படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சக்திவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தனிப்படை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இன்ஸ்டாகிராம் காதலிக்காக நண்பரே கூட்டாளிகளுடன் சேர்ந்து சக்திவேலை கொலை செய்தது தெரியவந்தது.

பண்ருட்டி பகுதியை சேர்ந்தவர் பூமிகா திருமணமான இவர் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் அழகியாக சித்தரித்து சினிமா நடிகைபோல் பாடல்கள் பாடி பதிவிட்டு வந்தார். இந்த விவகாரம் பூமிகாவின் கணவருக்கு தெரியவந்தது. இதனால் 2 பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே பூமிகா கணவரை விட்டு பிரிந்து தனியாக வசித்துவந்தார்.

அப்போது கொலை செய்யப்பட்ட சக்தி வேலுக்கும் பண்ருட்டி பகுதியை சேர்ந்த பூமிகா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அதன் பின்னர் பூமிகா பண்ருட்டியில் உள்ள பேக்கரியில் வேலைபார்த்து வந்தார். அப்போது சக்திவேல் அடிக்கடி பூமிகாவை தனது ஆட்டோவில் பேக்கரியில் விடுவது உண்டு.

சக்திவேலின் நண்பர் சுமன் ஆட்டோ டிரைவரான இவர் பண்ருட்டி களத்துமேட்டு பகுதியை சேர்ந்தவர். இவரும் பூமிகாவின் இன்ஸ்டாகிராமை பார்த்துள்ளார். எனவே சுமன், பூமிகாவின் அழகில் சொக்கிபோனார். பூமிகாவை ஆட்டோ டிரைவர் சுமன் தொடர்பு கொண்டு பேசினார். இனிக்க இனிக்க பேசியதால் பூமிகா சுமனின் பேச்சில் மகுடி பாம்புபோல் மயங்கினார். இதனால் இருவரும் அடிக்கடி சந்தித்து வந்தனர். அதோடு கொலை செய்யப்பட்ட சக்திவேலுடன் இருந்த தொடர்பையும் பூமிகா விடவில்லை.

இந்த விவகாரம் சுமனுக்கு தெரியவந்தது. உடனடியாக சுமன் நேரடியாக தனது நண்பர் என்றும் பாராமல் இன்ஸ்டாகிராம் காதலிக்காக சக்திவேலை கண்டித்தார். ஆனாலும் சக்திவேல்-பூமிகா 2 பேரும் தொடர்ந்து ஆட்டோவில் சுற்றி வந்தனர். இந்த தகவல் சுமனுக்கு எட்டியது.

எனவே தனது நண்பர் சக்திவேலை தீர்த்துகட்ட திட்டம் தீட்டினார். அதன்படி சுமன் தனது கூட்டாளிகளிடம் இதுபற்றி தெரிவித்தார். அவர்களும் இதற்கு சம்மதித்தனர். சம்பவத்தன்று சுமன் தனது நண்பரான சக்திவேலை மதுகுடிக்க போகலாம் என பேசி அழைத்தார். இதனை நம்பிய சக்திவேல் அவருடன் சென்றார்.

பண்ருட்டி தட்டாஞ்சாவடி காளிகோவில் பின்புறம் உள்ள சுடுகாட்டு பகுதியில் மது அருந்தினர். போதை தலைக்கு ஏறியதால் சுமன் மீண்டும் சக்திவேலை பார்த்து பூமிகாவுடன் பேசுவதை நிறுத்த வேண்டும் என தெரிவித்தார். இதனால் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது மறைந்திருந்த சுமனின் கூட்டாளிகள் 3 பேர் ஓடி வந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் சக்திவேலை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் அவர் துடிதுடிக்க இறந்துபோனார்.

மேற்கண்ட தகவல் விசாரணையில் தெரியவந்தது. தலைமறைவாகி உள்ள பூமிகாவை போலீசார் தேடி வருகின்றனர். அவரை பிடித்தால் மேலும் உண்மை நிலவரம் தெரியவரும். இது தொடர்பாக தனிப்படை போலீசார் சக்திவேலை கொலை செய்ததாக சுமன், வசந்தகுமார், குணா, பட்டீசா குணா ஆகியோரை கைது செய்தனர்.

கைதான அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Share this story