மேகதாது அணை விவகாரம் : சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

By 
meka

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் பற்றி விவாதிக்கக் கூடாது என்று தமிழக அரசு சார்பில், தாக்கல் செய்யப்பட்ட மனு சுப்ரீம் கோர்ட்டில், இன்று நீதிபதி கன்வெல்கர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 

அப்போது, தமிழக அரசு சார்பில் இந்த விவகாரத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 

தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல் வாதாடுகையில் கூறியதாவது : 

காவிரி நதிநீர் பங்கீட்டை கூட கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி சரியாக செயல்படுத்துவதில்லை. 

இந்த சூழலில் மேகதாது அணைகட்டியதற்கு பிறகு உரிய நீரை வழங்குவோம் என்பது போன்ற கர்நாடக அரசின் வாக்குறுதிகளை நாங்கள் நம்பமுடியாது. இவ்வாறு அவர் வாதாடினார். 

அதற்கு மறுப்பு தெரிவித்து கர்நாடக அரசு வக்கீல் வாதாடுகையில், 'காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை விவகாரத்தை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்' என்றார். 

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் நாளை மறுநாள் (வெள்ளிக் கிழமை) நடைபெற உள்ள காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை பற்றி விவாதிக்க கூடாது என்று உத்தரவிட்டனர். 

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது :

மேகதாது அணை விவகாரத்தில் நாங்கள் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கருத்தையும் தெரிந்து கொள்ள விரும்புகிறோம். 

எனவே காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது விவகாரம் பற்றி விவாதிக்கலாமா? அல்லது வேண்டாமா? என்பது பற்றிய விவரங்களை பதிலாக அளிக்குமாறு காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. 

வருகிற வெள்ளிக்கிழமை காவிரி ஆணைய கூட்டம் நடைபெறலாம். ஆனால் மேகதாது அணை விவகாரம் பற்றி அதில் விவாதிக்க தடை விதிக்கிறோம். 

2018-ம் ஆண்டில் இருந்து இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. 

இன்னும் ஒரு வாரத்தில் எதுவும் மாறிவிடப் போவதில்லை. இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்தனர். 

பின்னர், இந்த வழக்கை வருகிற 26-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.
*

Share this story