சிக்கல் தீர்க்கும் மையங்களை உருவாக்க வேண்டும் : முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
 

By 
opsstalin

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியக் கடல் எல்லைக்கு உட்பட்ட, வழக்கமாக மீன் பிடிக்கும் பகுதிகளில், தங்களின் வாழ்வாதாரத்திற்காக மீன்பிடித் தொழிலை மேற்கொண்டு வரும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கைக் கடற்படையினரால் சிறை பிடிக்கப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் கடந்த சில மாதங்களாக தொடர் கதையாக இருந்து வருவது வேதனை அளிக்கும் செயலாகும்.

இலங்கை கடற்படையின் இதுபோன்ற தொடர் துன்புறுத்துதல்களைப் பார்க்கும்போது, இந்திய மீனவர்கள் மீன்பிடித் தொழிலையே கைவிடும் அளவுக்கு அவர்கள் மனதில் ஒரு பதற்றத்தை, ஒரு பீதியை உருவாக்கும் நோக்கத்தோடு இலங்கை கடற்படை செயல்படுகிறதோ என்ற அச்சம் மீனவ மக்களிடையே நிலவுகிறது.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறைபிடிக்கப்படும் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், இரு நாட்டுக் கடற்கரை பகுதிகளிலும் சிக்கல் தீர்க்கும் மையங்களை உருவாக்க மத்திய அரசை தி.மு.க. வற்புறுத்தும் என்று தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது.

ஆனால், தி.மு.க. ஆட்சிக்கு வந்து 15 மாதங்கள் முடிந்த நிலையில், இதற்கான முயற்சியை எடுத்ததாகத் தெரியவில்லை. தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிப்பது தொடர்பாக நான் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதங்களை எழுதி உள்ளேன். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது கடிதங்களை எழுதுகிறார்.

இருப்பினும், தமிழக மீனவர்களை தொடர்ந்து சிறைபிடிப்பதை இலங்கை கடற்படை வாடிக்கையாக கொண்டு உள்ளது. எனவே, இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து சிறை பிடிக்கப்படுவதை தடுக்கவும், அவர்களுடைய படகுகள் பறிமுதல் செய்யப்படுவதை நிறுத்தவும், அவர்கள் எவ்வித அச்சமுமின்றி இந்திய எல்லைக்குட்பட்ட கடல் பகுதியில் சுதந்திரமாக மீன்பிடித் தொழிலை மேற்கொள்ளவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், இரு நாட்டு கடற்கரை பகுதிகளிலும் சிக்கல் தீர்க்கும் மையங்களை உருவாக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Share this story