மின் கட்டண இணைப்புடன், ஆதார் எண் இணைப்பு குறித்து, புதிய தகவல்..

epbill

ஆதார் எண்ணை இணைப்பதற்கு வசதியாக அதற்கான கால அவகாசம் இந்த மாதம் 31- ந் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. மின் நுகர்வோர்கள் மின் வாரிய இணையதளத்தை பயன்படுத்தியும் ஆதார் எண்ணை இணைக்கலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழக அரசு வழங்கிய கால அவகாசம் நீட்டிப்பு நிறைவு பெறுவதற்கு இன்னும் 2 வாரங்கள் அவகாசம் உள்ளன. நேற்று வரை மின் இணைப்பு எண்ணுடன் 1.96 கோடி பேர் தங்களது ஆதார் எண்ணை இணைத்து உள்ளனர்.

இன்னும் சுமார் 70 லட்சம் பேர் ஆதார் எண்ணை இணைக்க வேண்டி உள்ளது. அவர்களையும் பட்டியலில் கொண்டு வருவதற்காக அவர்களது செல்போன் எண்ணுக்கு மின் வாரிய ஊழியர்கள் குறுஞ்செய்தி அனுப்பி வருகிறார்கள். இதை தவிர மின் நுகர்வோர்களை தொலைபேசி மூலமாகவும் தொடர்பு கொண்டு ஆதார் எண்ணை இணைக்குமாறு வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில் ஆதார் எண் இணைத்தவர்களில் சிலரது தகவல்கள் அழிந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கடந்த நவம்பர் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டதும் பலரும் ஆன்லைன் மூலமாக ஆதார் எண்ணை இணைத்தனர்.

கடந்த டிசம்பர் மாதம் 4-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை ஆயிரக்கணக்கானவர்கள் ஆன்லைன் மூலம் ஆதார் எண்ணை இணைத்து இருந்தனர். இந்த இடைப்பட்ட தேதிகளில் ஆதார் எண்ணை இணைத்து இருந்தவர்களின் தகவல்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அழிந்து விட்டதாக கூறப்படுகிறது.

நுகர்வோர்களின் தகவல்கள் தொழில்நுட்ப கோளாறால் மாயமாகி விட்டன. மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்த பிறகு அதை மின் வாரிய தகவல் சேமிப்புடன் இணைக்கும் போது மின் நுகர்வோர்களின் தகவல்கள் சேமிக்கப்படாமல் போய்விட்டதாக கூறப்படுகிறது. இதை மின் வாரியத்தின் மூத்த அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.

அவர் கூறுகையில், "மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் போது முகவரியில் குறிப்பிடப்பட்ட சில தகவல்கள் சேமிப்பாகவில்லை. அவர்களுக்கு ஆதார் எண் இணைக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்திருந்தாலும் தகவல்கள் சர்வரில் இடம்பெறாமல் போய்விட்டது" என்றார்.

இதையடுத்து விடுபட்ட தகவல்களை மீண்டும் இணைப்பதற்கு மின்வாரிய ஊழியர்கள் தீவிர முயற்சி செய்தனர். ஆனால் அதில் வெற்றி கிடைக்கவில்லை. எத்தனை பேரின் ஆதார் எண் இணைப்பு முழுமையாக சேமிக்கப்படவில்லை என்பது தெரியவில்லை. இத்தகைய சூழ்நிலையில் விடுபட்டோர்களின் ஆதார் எண்ணை மீண்டும் இணைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக விடுபட்ட ஆதார் இணைப்பு எண்களுக்கு உரியவர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பப்பட்டு வருகிறது.

Share this story