சென்னையில் போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு : 10-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது; விவரம்..
 

trans1

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வடபழனி 100 அடி சாலையில் ஏற்கனவே சோதனை ஓட்டமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதையடுத்து இந்த போக்குவரத்து மாற்றம் வருகிற 10-ந் தேதி முதல் நிரந்தரமாக்கப்படுகிறது. இதுதொடர்பாக போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

100 அடி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக ஏற்கனவே ஜூலை 23-ந் தேதி முதல் நெற்குன்றம் சிக்னல், பெரியார் பாதை சிக்னல் மற்றும் விநாயகபுரம் சிக்னல் ஆகிய 3 இடங்களிலும் சென்டர் மீடியன் மூடப்பட்டு தற்போது நல்ல முறையில் போக்குவரத்து சீராக செல்ல வழி வகை செய்யப்பட்டுள்ளது.

மேலும் நெற்குன்றம் சிக்னல், பெரியார் பாதை சிக்னல் மற்றும் விநாயகபுரம் சிக்னல் சந்திப்புகளில் ஏற்படும் நெரிசல்களை குறைக்க கடந்த 23.07.2022 முதல் சோதனை ஓட்டமாக கீழ்க்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வடபழனியில் இருந்து கோயம்பேடு செல்லும் வாகனங்கள் நெற்குன்றம் சந்திப்பில் யு திருப்பம் செய்ய விரும்புபவர்கள் நேராக சென்று 170 மீட்டர் தூரத்தில் தூண் எண் 126 மற்றும் 127 இடையில் புதியதாக அமைந்துள்ள யு திருப்பத்தில் திருப்பி செல்லலாம்.

வடபழனியில் இருந்து கோயம்பேடு செல்லும் வழியில் பெரியார் பாதை சந்திப்பில் யு திருப்பம் மற்றும் வலதுபக்கம் செல்லும் வாகனங்கள் கோயம்பேடு திசையில் 238 மீட்டரில் அரும்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையம் அருகில் தூண் எண்கள் 110 மற்றும் 111 இடையில் புதிதாக அமைந்துள்ள யு திருப்பத்தில் திரும்பிக் கொள்ளலாம்.

விநாயகபுரம் சந்திப்பில் யு திருப்பம் மற்றும் எம்.எம்.டி.ஏ. காலனி வலது புறம் திரும்பி செல்ல விரும்பும் வாகனங்கள் 496 மீட்டர் தொலைவில் உள்ள திருப்பத்தில் திரும்பி செல்லலாம்.

கோயம்பேட்டில் இருந்து வரும் வாகனங்கள் நெற்குன்றம் சந்திப்பில் யு திருப்பம் மற்றும் வலதுபுறம் திரும்பும் வாகனங்கள் நேராக வடபழனி சர்வீஸ் ரோடு பாலத்தின்கீழ் 199 மீட்டர் தூரம் சென்று யு திருப்பம் எடுத்து செல்லலாம். இந்த போக்குவரத்து மாற்றத்தினால் தற்போது நெற்குன்றம் சிக்னல், பெரியார்பாதை சிக்னல் மற்றும் விநாயகபுரம் சிக்னல்களில் வாகனங்கள் தங்கு தடையின்றி செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனை ஓட்டமானது நல்ல முறையில் இயங்கி வருவதால் மேற்கண்ட இடத்தில் நிரந்தரமாக வருகிற 10-ந் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.

அண்ணாசலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக ஏற்கனவே அண்ணாசாலை-டேம்ஸ் சாலை சந்திப்பு ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டும் அண்ணாசாலை- திரு.வி.க. சந்திப்பு ஒரு வழிபாதையாக மாற்றம் செய்யப்பட்டும் தற்போது நல்ல முறையில் போக்குவரத்து சீராக செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து மாற்றத்தினால் ஸ்மித் சாலை சிக்னல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதால் அண்ணா மேம்பாலம் நோக்கி செல்லும் வாகனங்கள் தங்கு தடையின்றி செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த சோதனை ஓட்டமானது நல்லமுறையில் இயங்கி வருவதால் நிரந்தரமாக வருகிற 10-ந் தேதி முதல் போக்குவரத்து அமல்படுத்தப்படுகிறது. கோட்டூர்புரம் போக்குவரத்து காவல் நிலையத்திற்குட்பட்ட மத்திய கைலாஷ் சந்திப்பில் பழைய மகாபலிபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலைகளில் அமைந்துள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு வாகன போக்குவரத்தில் மாற்றம் செய்து சோதனை ஓட்டமாக கடந்த 20.05.2022 முதல் அமல்படுத்தப்பட்டு போக்குவரத்து நல்ல முறையில் தொடர்ந்து இயங்கி வருகிறது.

மேலும் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளதால் வரும் 10-ந் தேதி முதல் நிரந்தரமாக போக்குவரத்து அமல்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share this story