இனி, யாராலும் அத்துமீற முடியாது : மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி 

jaishankar

இந்தியாவின் அருணாச்சல பிரதேசம் தவாங் மாவட்டம் யாங்சி பகுதி சீன நாட்டையொட்டி உள்ளது. தவாங் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற புத்த மடாலயம் உள்ளது.

இங்கிருந்து திபெத் பகுதியை முழுமையாக கண்காணிக்கலாம். இதனால் இந்தியாவின் தவாங் பகுதியை கைப்பற்ற சீனா பலமுறை முயற்சி செய்தது. கடந்த 9-ந் தேதியும் சுமார் 600 சீன ராணுவ வீரர்கள் தவாங் பகுதிக்குள் நுழைய முயன்றனர். அவர்களை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தி விரட்டியது.

இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசு மீது புகார் கூறினார். இந்திய நில பகுதிகளை சீனா ஆக்கிரமித்து உள்ளது. இந்தியா மீது போர் தொடுக்க சீனா ராணுவம் தயாராகி வருகிறது.ஆனால் மத்திய அரசு தூங்கி கொண்டிருக்கிறது என்று குற்றம் சாட்டினார்.

இதற்கு மத்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது :

எல்லை பகுதியில் இதுவரை இல்லாத அளவுக்கு ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். சிலர் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளில் துளியும் உண்மை இல்லை. இந்திய எல்லையை இனி யாராலும் தன்னிச்சையாக மாற்ற முடியாது.

குறிப்பாக சீனாவால் எல்லை கோட்டை தாண்ட முடியாது. சீனாவின் அத்துமீறல்களுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும். பிரதமர் மோடியின் உத்தரவுப்படியே எல்லைக்கு ராணுவ வீரர்கள் சென்றுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் பாராளுமன்றத்திலும் இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து மத்திய மந்திரி ஜெய்சங்கர் கூறும்போது, அருணாச்சல பிரதேச எல்லை விவகாரத்தை அரசியல் ரீதியாக விமர்சிப்பதை நாங்கள் தடுக்கவில்லை. ஆனால் ராணுவ வீரர்களை அவமதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது, என்றார்.

Share this story