தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 16,888 சிறப்பு பஸ்கள் இயக்கம் : முன்பதிவு முழு விவரம்..
 

By 
bus7

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழக்கம் போல் இந்த ஆண்டும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று (திங்கட்கிழமை) சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமை தாங்கினார். போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் கோபால் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்ததும் சிறப்பு பஸ்கள் தொடர்பான தகவல்களை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகிற 21-ந்தேதி முதல் 23-ந்தேதி வரையில் சென்னையில் இருந்து தினசரி இயக்கக் கூடிய 2,100 பஸ்களுடன், 4,218 சிறப்பு பஸ்கள் என 3 நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தம் 10,518 பஸ்களும், பிற ஊர்களில் இருந்து மேற்கண்ட 3 நாட்களுக்கு 6,370 சிறப்பு பஸ்கள் என மொத்தமாக 16,888 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர் பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வருகிற 24-ந்தேதி முதல் 26-ந்தேதி வரையில் தினசரி இயக்கக் கூடிய 2,100 பஸ்களுடன், 3,062 சிறப்பு பஸ்களும், ஏனைய பிற முக்கிய ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 3,790 சிறப்பு பஸ்கள் என மொத்தமாக 13,152 பஸ்களும் இயக்கப்படுகின்றன.

தீபாவளிக்கு முன்பு தினமும் இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கை வருமாறு:-

வருகிற 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வழக்கமாக இயக்கப்படும் 2100 பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் சென்னையில் இருந்து 1437 சிறப்பு பஸ்களும், பல்வேறு முக்கிய இடங்களில் இருந்து 1765 சிறப்பு பஸ்களும் இயக்கப்படும். 22-ந் தேதி (சனிக்கிழமை) வழக்கமாக இயக்கப்படும் 2100 பஸ்கள் இயக்கப்படுகிறது.

மேலும் சென்னையில் இருந்து 1586 சிறப்பு பஸ்களும், பல்வேறு முக்கிய இடங்களில் இருந்து 2620 சிறப்பு பஸ்களும் இயக்கப்படும். 23-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வழக்கமாக இயக்கப்படும் 2100 பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் சென்னையில் இருந்து 1195 சிறப்பு பஸ்களும், பல்வேறு முக்கிய இடங்களில் இருந்து 1985 சிறப்பு பஸ்களும் இயக்கப்படும்.

3 நாட்களும் வழக்கமாக இயக்கப்படும் 6300 பஸ்கள், 10588 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 16,888 பஸ்கள் இயக்கப்படுகின்றன. அனைத்து இருக்கைகளும் பூர்த்தியான அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பஸ்கள் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு பூந்தமல்லி, நசரத்பேட்டை, அவுட்டர் ரிங்ரோடு வழியாக வண்டலூர் சென்றடைந்து ஊரப்பாக்கம் தற்காலிக பஸ் நிலையத்திற்கு சென்று தாம்பரம் மற்றும் பெருங்களத்தூரில் இருந்து பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்த பயணிகளை ஏற்றுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து திருப்போரூர்-செங்கல்பட்டு அல்லது ஸ்ரீபெரும்புதூர்-செங்கல்பட்டு வழியாக செல்ல வேண்டும். வருகிற 21-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை இந்த பஸ்களுக்கு முன்பதிவு செய்யலாம்.

காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை முன்பதிவு நடைபெறும். பயணிகள் முன் பதிவு செய்வதற்காக கோயம்பேடு பஸ் நிலையத்தில் 10 முன் பதிவு மையங்களும், தாம்பரம் சானடோரியத்தில் ஒரு முன்பதிவு மையமும் செயல்படும். மேலும் போக்குவரத்து கழகத்தின் செயலி மற்றும் இணையதளங்கள் மூலமா கவும் முன்பதிவு செய்யலாம்.

தீபாவளிக்கு பிறகு தினமும் இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கை வருமாறு:- வருகிற 24-ந் தேதி (திங்கட்கிழமை) வழக்கமான 2100 பஸ்கள் இயக்கப்படும். மேலும் பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு திரும்ப 530 சிறப்பு பஸ்களும், சென்னையை தவிர்த்து இதர இடங்களுக்கு திரும்ப 580 சிறப்பு பஸ்களும் இயக்கப்படும்.

வருகிற 25-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வழக்கமான 2100 பஸ்கள் இயக்கப்படும். மேலும் பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு திரும்ப 1678 சிறப்பு பஸ்களும், சென்னையை தவிர்த்து இதர இடங்களுக்கு திரும்ப 2080 சிறப்பு பஸ்களும் இயக்கப்படும். வருகிற 26-ந் தேதி (புதன் கிழமை) வழக்கமான 2100 பஸ்கள் இயக்கப்படும்.

மேலும் பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு திரும்ப 854 சிறப்பு பஸ்களும், சென்னையை தவிர்த்து இதர இடங்களுக்கு திரும்ப 1130 சிறப்பு பஸ்களும் இயக்கப்படும். இந்த 3 நாட்களும் வழக்கமாக இயக்கப்படும் 6300 பஸ்கள், 6852 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 13,152 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

மேலும், பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கும் ஏதுவாக, 94450 14450, 94450 14436 ஆகிய தொலைபேசி எண்களை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.

மேலும், ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151, 044-24749002, 044-26280445, 044-26281611 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும், பயணிகளின் நலன் கருதி, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும்.

பேருந்து நிலையங்களுக்கு வருகை தரும் பயணிகள் பேருந்து மற்றும் வழித்தடம் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள ஏதுவாக 20 இடங்களில் தகவல் மையங்கள் அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்தி பாதுகாப்பான முறையில் பயணம் செய்ய வேண்டும்.

பொதுமக்களின் வசதிக்காக கோயம்பேடு பஸ் நிலையத்திலிருந்து மேற்கூறிய 4 பேருந்து நிலையங்களுக்கு செல்ல ஏதுவாக மாநகர் போக்கு வரத்துக் கழகத்தின் சார்பில் இணைப்புப் பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 

Share this story