அம்பேத்கரின் கொள்கையை பின்பற்றுகிறார் பிரதமர் மோடி : முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை
 

By 
ambet

டெல்லியில் இன்று 'புளூ கிராப்ட் டிஜிட்டல் பவுண்டேஷன்' என்ற நிறுவனம் சார்பில், 'அம்பேத்கரும் மோடியும்- சீர்திருத்தவாதிகளின் சிந்தனையும் செயல் வீரர்களின் நடவடிக்கையும்' என்ற ஆங்கில புத்தகம் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த புத்தகத்திற்கு இசையமைப்பாளரும், மாநிலங்களவை எம்.பி.,யுமான இளையராஜா அணிந்துரை எழுதியிருந்தார். ஆனால் இளையராஜா இந்த விழாவில் கலந்துக் கொள்ளவில்லை என தெரிகிறது.

புத்தகத்தில், அம்பேத்கரின் லட்சியங்களுக்கும் புதிய இந்தியாவின் வளா்ச்சிப் பயணத்துக்கும் இடையிலான மறுக்க முடியாத பிணைப்பு, இந்தியா குறித்த அவரின் தொலைநோக்குப் பாா்வையை விவரிக்கப்பட்டுள்ளது.

அம்பேத்கரின் தொலைநோக்குப் பாா்வை திறம்பட அமலுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதை எடுத்துக்காட்ட பிரதமா் மோடி தலைமையில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் நூலில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. இந்த புத்தகத்தை டெல்லியில் இன்று நடைபெற்ற விழாவில் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார். மத்திய மந்திரி அனுராக் தாக்கூர், எல்.முருகன் உள்ளிட்டோர்

இவ்விழாவில் பங்கேற்றனர். பின்னர் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றியதாவது:- அரசியல் நிர்ணய சபையின் வரைவுக் குழு தலைவரான பாபாசாகேப், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் திட்டத்தை அப்போது நிராகரித்தார். ஆனால், சிக்கலான சம்பவங்களுக்குப் பிறகு ஜம்மு- காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. அது பாபாசாகேப்பின் விருப்பத்திற்கு எதிராக இருந்தது.

ஜம்மு காஷ்மீர் தொடர்பான இந்த ஏற்றத்தாழ்வு, மோடி அரசின் முயற்சியைத் தொடர்ந்து ஆகஸ்ட் 2019-ல் நீக்கப்பட்டது. பிரதமர் மோடியின் இந்த உத்தரவு பாபாசாகேப்பின் லட்சியங்களை நிறைவேற்றுகிறது.

இந்திய ஜனாதிபதி என்ற முறையில் இந்த உத்தரவில் கையெழுத்திடும் வாய்ப்பைப் பெற்றதற்கு நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். சுதந்திரப் போராட்டத்தின் போது, ​​நாடு வகுப்புவாதத்தின் கோரப்பிடியில் இருந்தது. அப்போது, ​​மக்களை மத ரீதியில் பார்க்கக் கூடாது என்று மூத்த தலைவர்களிடமிருந்து பரிந்துரைகள் இருந்தன. பெரும்பாலான தலைவர்கள் நாம் முதலில் இந்தியர்கள் என்றும் பின்னர்தான் இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் அல்லது கிறிஸ்தவர்கள் என்றும் சொல்ல வேண்டும் என்று கூறினார்கள்.

ஆனால் பாபாசாகேப்பின் சிந்தனை உயர்ந்த மட்டத்தில் இருந்தது. முதலில் நாம் இந்தியர்கள், பின்னர் இந்தியர்கள் மற்றும் இறுதிவரை இந்தியர்கள் என்று சொல்ல வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இந்தியத்தன்மையே நமது உண்மையான அடையாளம், மதம், ஜாதி, பிரிவு ஆகியவற்றுக்கு இங்கு இடமில்லை என்றும் அவர் கூறினார். அதுபோல், பிரதமர் மோடியும் இந்தியாதான் முதல் என்று கூறுகிறார்.

மோடி பாபாசாகேப்பின் தொலைநோக்குப் பார்வையை மெய்ப்பிக்கிறார். மோடி அம்பேத்கரின் உண்மையான சீடர் என்பதற்கு இன்று வெளியாகியுள்ள புத்தகமே சாட்சி. அம்பேத்கர் வகுத்த கொள்கைகளின்படி, நல்லாட்சிக்காகவும், சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவும் பிரதமர் பல முயற்சிகளை எடுத்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Share this story