சேவலின் பின்னால் சுற்றிய போலீஸ்காரர்கள்; ஏன் தெரியுமா?

birds

தடையை மீறி சேவல் சண்டை நடத்தியவர்களை போலீசார் துரத்தி பிடித்ததை கேள்விபட்டிருப்போம். ஆனால் சேவல் யாருடையது என்பதை கண்டுபிடிப்பதற்காக சேவலின் பின்னால் 3 போலீசார் 24 மணி நேரமாக அலைந்த சம்பவம் கொல்கத்தாவில் நடந்துள்ளது.

அங்குள்ள தெற்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள பலூர்காட் பகுதியை சேர்ந்த சும்கிசர்கார் என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை மாலையில் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

அப்போது தனது சேவல் ஒன்றை பக்கத்து வீட்டை சேர்ந்த பிஸ்வாஸ் என்ற ரிக்‌ஷா தொழிலாளி எடுத்து வைத்துக்கொண்டதாகவும், அதனை மீட்டு தரவேண்டும் எனவும் கூறியிருந்தார். மேலும், நான் கோழி வியாபாரி ஒருவரிடம் இருந்து அந்த சேவலை சமீபத்தில் வாங்கி இருந்தேன். அதனை எடுத்துவைத்துக்கொண்ட பிஸ்வாஸ் அந்த சேவல் தன்னுடையது என சொந்தம் கொண்டாடுகிறார்.

அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து போலீசார் சும்கிசர்காரை அழைத்துக்கொண்டு பிஸ்வாஸ் வீட்டிற்கு சென்றனர். அங்கு சேவல் இருப்பதை கண்டறிந்த போலீசார் புகார் தொடர்பாக பிஸ்வாசிடம் விசாரித்தனர். அப்போது அவர் இந்த சேவல் தன்னுடையது என உறுதியாக கூறினார்.

இதனால் போலீசார் குழப்பம் அடைந்தனர். உண்மையிலேயே அந்த சேவல் யாருடையது என்பதை எப்படி கண்டுபிடிக்கலாம் என போலீஸ் நிலையத்தில் கூட்டம் போட்டு ஆலோசனை நடத்தினர்.

அப்போதுதான் போலீஸ் நிலைய அதிகாரி சாந்திநாத் பஞ்சாவுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. பொதுவாக இரைதேடும் கோழிகள் மாலையில் தங்கள் உரிமையாளர்களின் இருப்பிடத்திற்கு திரும்புவது வழக்கம் என்பதால் அந்த முறையிலேயே இந்த சேவலின் உரிமையாளர் யார் என்பதை கண்டுபிடிக்கலாம் என திட்டம் தீட்டினர்.

அதன்படி சனிக்கிழமை முழுவதும் அந்த சேவலை வெளியில் சுதந்திரமாக திரியவிட்டனர். அதனை 3 போலீஸ்காரர்கள் பின் தொடர்ந்து சென்றனர். மாலை நேரத்தில் அந்த சேவல் புதர்களுக்குள் சுற்றித்திரிந்தது. நள்ளிரவிலும் அங்கும் இங்குமாக சுற்றிய சேவலின் பின்னால் டார்ச்லைட் அடித்தபடியே போலீஸ்காரர்கள் பின்தொடர்ந்து சென்று கண்காணித்தனர்.

சுமார் 24 மணி நேரத்திற்கு பிறகு அந்த சேவல் சும்கிசர்காரின் வீட்டிற்கு சென்றது. இதையடுத்து அந்த சேவலை சும்கிசர்காரிடம் ஒப்படைத்தனர். அதன்பிறகே இந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது.
 

Share this story