அரசியல் ஆடுகளம் : அண்ணாமலையுடன், ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணிகள் சந்திப்பு

By 
erodue

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27-ம் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 31-ம் தேதி தொடங்குகிறது. தேர்தலில் பதிவாகும் மார்ச் 2ம் தேதி எண்ணப்படுகிறது.

இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட உள்ளது. அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளரை நிறுத்த திட்டமிட்டுள்ளது. அதேவேளை, இடைத்தேர்தலில் அதிமுக தரப்பில் நாங்கள் போட்டியிடுவோம் ஒருவேளை தேர்தலில் பாஜக போட்டியிட்டால் ஆதரவு தருவோம் என்று ஓ.பன்னீர் செல்வம் இன்று காலை கூறியிருந்தார்.

இதனிடையே, இடைத்தேர்தலில் ஆதரவு கேட்டு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆதரவாளர்கள் இன்று மாலை தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகம் சென்றனர். அங்கு பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்து இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் களமிறக்கப்படும் வேட்பாளருக்கு ஆதரவு கேட்டனர்.

இந்த சந்திப்பிற்கு பின் சிறிது நேரத்தில் பாஜக தலைமை அலுவலகத்திற்கு ஓ.பன்னீர் செல்வம் வந்தார். அவர் பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்தார்.

இந்த சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் குறித்து இன்று காலை விரிவாக நான் பேட்டி அளித்துள்ளேன். அதில், பல கேள்விகள் கேட்டீர்கள் அதற்கான பதிலையும் நான் கொடுத்துள்ளேன்.

நாங்கள் இன்று பாஜக தலைமை அலுவலகத்திற்கு வந்து மாநில பாஜக தலைவரையும், பாஜக முன்னணி தலைவர்களையும் மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். எங்கள் சந்திப்பு மிகவும் மகிழ்ச்சிகரமாகவும் மாநில நலன் பற்றியும், மத்திய அரசின் நலன் பற்றியும் விரிவாக மனம் விட்டு பேசினோம்.

ஏற்கனவே காலையில் நாங்கள் அதிமுகவில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிடுவோம் என்று கூறினோம். ஒரு நிரூபர் பாஜக போட்டியிட்டால் உங்கள் நிலை என்ன என்று கேட்டார். தேசிய நலன் கருதி பாஜக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட முன்வந்தால் உறுதியாக எங்கள் தார்மீக ஆதரவை அளிப்போம் என்று பதில் கூறினேன். அந்த நிலை தான் இப்பொழுதும்' என்றார். 

Share this story