பொங்கல் பண்டிகை : ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடக்கம்

By 
railway1

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 15-ந் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சென்னை உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் பயணமாவார்கள்.

இதைதொடர்ந்து பயணிகள் வசதிக்காக ரெயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது. 120 நாட்களுக்கு முன்பு ரெயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுண்டர்கள் மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் வழியாக ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இதன்படி பொங்கல் பண்டிகைக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு நாளை (12-ந் தேதி) தொடங்குகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி 10-ந் தேதி பயணிக்க விரும்புபவர்கள் நாளை டிக்கெட்களை முன்பதிவு செய்யலாம். ஜனவரி 11-ந் தேதி பயணம் செய்ய விரும்புபவர்கள் நாளை மறுநாள் (13-ந் தேதி) முன்பதிவு செய்யலாம்.

ஜனவரி மாதம் 12-ந் தேதி பயணம் செய்ய விரும்புபவர்கள் வருகிற 14-ந் தேதியும், ஜனவரி 13-ந் தேதி ரெயில் பயணத்தை மேற்கொள்ள விரும்புபவர்கள் வருகிற 15-ந் தேதியும் டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

பொங்கலுக்கு முந்தைய நாளான ஜனவரி 14-ந் தேதி பயணம் செல்பவர்கள் வருகிற 16-ந் தேதியும் பொங்கல் அன்று (ஜனவரி 15-ந் தேதி) பயணிப்பவர்கள் வருகிற 17-ந் தேதியும் (சனிக்கிழமை) முன்பதிவு செய்யலாம்.

ரெயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்களில் தினமும் காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கும். இதனை பொங்கல் பண்டிகைக்கு பயணிப்போர் திட்டமிட்டுக்கொண்டு பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Share this story