அனைத்துக் காவலர்களுக்கும் கிடைத்திருக்கக்கூடிய பெருமை : முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
 

pre2

தமிழக போலீஸ் துறைக்கு கவுரவமிக்க ஜனாதிபதியின் கொடி வழங்கும் விழா, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கில் நடைபெற்றது. 

இதில், கலந்துகொண்டு முதமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்ததாவது: 

'தமிழகக் காவல்துறை வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நாளாக, இந்த நாள் அமைந்திருக்கிறது. 

குடியரசுத் தலைவரினுடைய வண்ணக்கொடி என்ற மிக மிக உயர்ந்த அங்கீகாரத்தை நம்முடைய தமிழக காவல்துறை பெறுகிறது. 

அதனை வழங்குவதற்கு மாண்புமிகு குடியரசுத் துணைத்தலைவர் அவர்கள் வருகை தந்துள்ளார். 

இச்சிறப்பினை வழங்குவதற்காக வருகை தந்துள்ள குடியரசுத் துணைத்தலைவருக்கு என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இது இரட்டை மகிழ்ச்சியை எங்களுக்கு வழங்குகிறது. 

தமிழக காவல்துறைக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டிற்கே கிடைத்திருக்கக்கூடிய வரலாற்றுமிகு பெருமை இது, தனிப்பட்ட ஒரு காவலருக்குக் கிடைத்த பெருமை அல்ல இது, 

ஒட்டுமொத்தமாக அனைத்துக் காவலர்களுக்கும் கிடைத்திருக்கக்கூடிய பெருமை. 

தமிழ்நாடு காவல்துறையின் குறிப்பிட்ட ஒரு சாதனைக்கு கிடைத்த விருது அல்ல, தமிழ்நாடு காவல்துறைக் காவலர்கள் 160 ஆண்டுகள் ஆற்றிய பணிக்குக் கிடைத்திருக்கக்கூடிய அங்கீகாரம் இது. 

இரவு பகல் பாராது, வெயில் மழை பாராது, ஏன், தன் உயிரைப் பற்றிக் கூட கவலைப்படாமல் ஆற்றிய உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம் இது. 

இதே விருதை இதற்கு முன் தமிழ்நாட்டுக்குப் பெற்றுத் தந்தவர் கலைஞர். 

2009-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19-ஆம் நாள் குடியரசுத் தலைவரின் கொடியினை தமிழ்நாடு காவல்துறைக்குப் பெற்றுத் தந்தார். 

தமிழக காவல்துறையானது தனக்குத்தானே சல்யூட் அடித்துக் கொள்ள வேண்டிய பெருமை இது. 

தமிழக காவல் துறையானது தனக்குத் தானே முதுகில் தட்டிக் கொடுத்துக்கொள்ள வேண்டிய சிறப்பு இது. 

பழம்பெரும் நகரமான இந்த சென்னை மாநகரத்தில் 1856-ஆம் ஆண்டு அன்றைய மதராஸ் மாநகரில்தான் முதன்முதலில் காவல்துறை வரலாறு தொடங்கியது' என்றார்.
*

Share this story