ஒரே தேசம், ஒரே மின் உற்பத்தித் திட்டம் குறித்து, பிரதமர் மோடி பேச்சு

pm modi321

டெல்லியில் 'உஜ்வல் பாரத் உஜ்வல் பவிஷ்யா - பவர் @2047' என்கிற நிகழ்ச்சியின் நிறைவு விழா இன்று நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில், பல்வேறு திட்டங்களின் பயனாளிகள் மட்டுமின்றி, முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். இதில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டு தலைமை வகித்து பேசினார்.

அப்போது, அவர் உரையாற்றியதாவது :

வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் பெரும் பங்காற்ற வேண்டிய எரிசக்தித் துறையை வலுப்படுத்த, சுமார் 2.5 லட்சம் கோடி ரூபாய் மின் பயன்பாட்டு நிலுவைத் தொகையை மாநில அரசுகள் வழங்க வேண்டும்.

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவின் முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதில் எரிசக்தி மற்றும் மின் துறைகள் பெரும் பங்கு வகிக்க உள்ளது. 

பல்வேறு மாநிலங்களுக்கு மின்வாரியங்களுக்கான நிலுவைத் தொகை ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் உள்ளது. மின்சாரம் உற்பத்தியில் இருந்து வீடு வீடாக விநியோகம் செய்வது வரையிலான நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான நிறுவனங்கள் சுமார் 2.5 லட்சம் கோடி ரூபாய் நிலுவைத் தொகை சிக்கலில் சிக்கியுள்ளன.

இந்த பணத்தை, மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும். 

பல அரசு துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள், மின் பகிர்மான நிறுவனங்களுக்கு, 60,000 கோடி ரூபாய்க்கு மேல் பாக்கி வைத்துள்ளனர்.

மின் விநியோகத் துறையில் இழப்புகள் இரட்டை இலக்கத்தில் இருக்கும் நிலையில், வளர்ந்த நாடுகளில் இவை ஒற்றை இலக்கத்தில் உள்ளது.

மேலும், கடந்த எட்டு ஆண்டுகளில் நாட்டில் சுமார் 1,70,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் சேர்க்கப்பட்டுள்ளது. ஒரே தேசம் ஒரே மின் உற்பத்தித் திட்டம் இன்று நாட்டின் பலமாக மாறியுள்ளது.

முழு நாட்டையும் இணைக்கும் வகையில் சுமார் 1,70,000 சர்க்யூட் கிலோமீட்டர் டிரான்ஸ்மிஷன் லைன்கள் போடப்பட்டுள்ளன. 

சௌபாக்யா திட்டத்தின் கீழ் 3 கோடி இணைப்புகளை வழங்குவதன் மூலம், நாடு செறிவூட்டல் இலக்கை நெருங்கி வருகிறது' என்றார்.
*

Share this story