பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணம் : 25 நிகழ்ச்சிகளில் பங்கேற்பு..

By 
modi66

நடப்பு 2022-ம் ஆண்டில் பிரதமர் மோடி, முதல் வெளிநாட்டுப் பயணமாக, ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ளார். 

இதற்காக, அவர் தலைநகர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ஜெர்மனி நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார்.

ஜெர்மனி பயணத்தை தொடர்ந்து, டென்மார்க் மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கும் அவர் செல்கிறார்.

மூன்று நாடுகளிலும் 65 மணி நேரம் செலவிடும் பிரதமர் மோடி, அந்நாடுகளின் தலைவர்களுடனான சந்திப்பு, கலந்துரையாடல், பேச்சுவார்த்தை என 25 நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். மேலும் சர்வதேச தொழில்துறை தலைவர்கள் 50 பேருடன் கலந்துரையாட உள்ளார். 

வெளிநாடு வாழ் இந்தியர்களையும் அவர் சந்திக்க உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, கனடா நாட்டின் சனாதன் மந்திர் கலாச்சார மையத்தில் நடைபெற்ற சர்தார் வல்லபபாய் படேல் சிலை சிறப்பு விழாவில் காணொலி மூலம் உரையாற்றிய பிரதமர், இந்த சிலை இந்தியா-கனடா இடையேயான உறவின் அடையாளம் என்று தெரிவித்தார். 

இந்த சிலை இந்தியாவுக்கே உத்வேகமாக விளங்கும் ஒற்றுமைச் சிலையின் பிரதி எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, சர்தார் படேல்,  சோம்நாத் கோவிலை புதுப்பித்து, ஆயிரக்கணக்கான ஆண்டுகால இந்திய பாரம்பரியத்தை மீட்டெடுத்ததுடன்,  இந்தியாவிற்கு ஒரு புதிய அடித்தளத்தை நிறுவினார் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

Share this story