உக்ரைன் விவகாரம் தொடர்பாக, பிரதமர் மோடி-அமெரிக்க அதிபர் ஜோபைடன் பேசிய வார்த்தைகள்..

By 
tt

உக்ரைன் விவகாரம் தொடர்பாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், பிரதமர் மோடியும் காணொலி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பேசிய பைடன், உக்ரைனில், ரஷ்யா நடத்தி வரும் போரினால் ஏற்பட்டுள்ள விளைவுகளை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து, அமெரிக்காவும் இந்தியாவும் நெருக்கமான ஆலோசனைகளை  தொடர்வதாக கூறினார். 

அமெரிக்க-இந்திய உறவு தொடர்ந்து ஆழமாகவும் வலுவாகவும் இருப்பதை உறுதி செய்வதற்கு, எங்களது தொடர் ஆலோசனை மற்றும் உரையாடல் முக்கியமானது என்றும் ஜோ பைடன் குறிப்பிட்டார். 

உக்ரைன் மக்களுக்கான இந்தியாவின் மனிதாபிமான ஆதரவை நான் வரவேற்கிறேன்' என்றும் அவர் தெரிவித்தார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் மற்றும் பிற அண்டை நாடுகளுக்கு மருந்துகள் மற்றும் பிற நிவாரணப் பொருட்களை அனுப்பியுள்ளோம்' என தெரிவித்தார். 

உக்ரைன் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், கூடுதல் மருந்துப் பொருட்கள் விரைவில் அனுப்ப உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

போர் நிறுத்தம் குறித்து உக்ரைன் மற்றும் ரஷ்ய அதிபர்களுடன், தாம் பலமுறை தொலைபேசியில் பேசியதாகவும்,  உக்ரைன் அதிபருடன் நேரடியாகப் பேச்சு நடத்துமாறு, அதிபர் புதினிடம் தாம் பரிந்துரைத்தேன் என்றும், பிரதமர் மோடி   கூறினார்.

இரு நாடுகளும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தாகவும் பிரதமர் தெரிவித்தார்.

புச்சா நகரில், அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை இந்தியா கண்டித்துள்ளதாகவும், பாரபட்சமற்ற விசாரணை நடத்துமாறு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளதாகவும் பிரதமர் மோடி விளக்கம் அளித்தார். 

ரஷ்யா, உக்ரைன் நாடுகள் பேச்சுவார்த்தையின் மூலம், அமைதிக்கான பாதைக்கு திரும்பும் என்று நம்புவதாகவும் பிரதமர் மோடி அப்போது குறிப்பிட்டார்.
*

Share this story