யாராலும் திருட முடியாத சொத்து : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

அரசு பள்ளிகளை மேம்படுத்த அரசின் பங்களிப்புடன் தனியார் பங்களிப்பையும் இணைத்து செயல்படுத்தும் வகையில், நம்ம ஸ்கூல் என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியுள்ளதாவது:
அரசுப் பள்ளிகளை தனியாருடன் இணைந்து மேம்படுத்தும் முன்னோடி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அனைத்தையும் அரசு மட்டும் செய்து விட முடியாது. அரசுப் பள்ளிகளை மேம்படுத்த அரசுடன் மக்களும் கை கோர்க்க வேண்டும்.
நாம் இந்த அளவிற்கு உயர்வதற்கு உதவியாக இருந்தது பள்ளிக் கூடம்தான். நம்மை உயர்த்திய பள்ளிக் கூடங்களுக்கு நாம் உதவி செய்ய வேண்டாமா என்பதற்காக நம்ம ஊரு பள்ளி என்ற இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நம்பர் ஒன் என்ற இடத்தை பிடித்துள்ளது. தரமான கல்வி வழங்குவதில் தமிழகம் 2ம் இடத்தில் உள்ளது. இதிலும் தமிழகம் முதலிடம் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளிக் குழந்தைகள் எந்தவித தடங்கலும் இல்லாமல் கல்வி கற்பதை திராவிட மாடல் ஆட்சி தந்து கொண்டிருக்கிறது.
கல்விதான் யாராலும் திருட முடியாத சொத்து. அந்த அறிவு சொத்தை உருவாக்கி தந்திருக்கிறோம். அதன் தொடர்ச்சியாக நம்ம ஊரு பள்ளி திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம். அரசு பள்ளி என்பது அரசின் சொத்து மட்டுமல்ல, மக்களின் சொத்தும் ஆகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.