ராணி எலிசபெத் 3 தடவை இந்தியா வந்தார்; வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த நிகழ்வுகள்..

By 
maru

மறைந்த இங்கிலாந்து மகாராணி எலிசபெத் என்றதும் அந்த மகராசியின் மறையாத நினைவுகளை உலகமே அசைபோடுகிறது. உலக தலைவர்கள் முதல் நம்மூர் கமல்ஹாசன் வரை பலரது உள்ளங்களில் ராணியாக இருப்பவர்.

இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் இருந்து விடுதலை பெற்ற நாடுகளில் இந்தியாவும் ஒன்று. நம் நாட்டின் முதல் பிரதமராக நேரு இருந்த போதுதான் அதாவது 1953-ம் ஆண்டு எலிசபெத் ராணியாக முடி சூடினார். அந்த விழாவுக்காக நேருவும் சென்றுள்ளார்.

அந்த விழாவில் தான் நேரு முதல் முறையாக டி.வி.க்கு பேட்டி கொடுக்கும் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. பி.பி.சி. தொலைக்காட்சி அவரை பேட்டி எடுத்து ஒளிபரப்பி இருக்கிறது. அந்த பேட்டியில் நேரு கூறியதாவது:- தொலைக்காட்சியை பற்றி நான் கேள்விப்பட்டதை தவிர அதுகுறித்து கொஞ்சம் தான் தெரியும். மகாராணியின் முடிசூட்டு விழாவுக்கு நான் வந்த போதே விமர்சனம் இருந்தது.

திரும்பி செல்லும் போதும் இருக்கும். அதில் சந்தேகம் இல்லை. ஆனால் அதிக அளவு விமர்சனம் இருக்கும் என்று தோன்றவில்லை. இதுதான் அவரது முதல் தொலைக்காட்சி பேட்டி. முதல்முறையாக ராணி எலிசபெத் 1961-ம் ஆண்டு இந்தியா வந்தார். அப்போது பிரதமர் நேருவை சந்தித்தார்.

மேலும் மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய நகரங்களுக்கும் வந்தார். ஆக்ராவில் தாஜ்மஹால் அழகை ரசித்தார். ராஜ்கோட்டில் காந்தி நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார். ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் அழைப்பின் பேரில் குடியரசு தின விழா வில் கலந்துகொண்ட ராணி எலிசபெத் தம்பதிகள் கவுரவிக்கப்பட்டார்கள்.

அப்போது சென்னையில் தமிழகத்தின் முதல்வராக இருந்த பெருந்தலைவர் காமராஜரையும் சந்தித்தார். அவரது எளிமையும், மக்கள் சேவையும் ராணியை மிகவும் கவர்ந்தது. சென்னையில் காமராஜர் முன்னிலையிலேயே தனது மகன் ஆண்ட்ரூவின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார். காமராஜர் இங்கிலாந்து சென்றபோது ராணியின் அரண்மனையில் விருந்து கொடுக்கப்பட்டது.

அந்த விருந்து நிகழ்ச்சியில் மரபை மீறி ராணி எலிசபெத்தே காமராஜருக்கு உணவு பரிமாறி இருக்கிறார். வழக்கமாக எந்த தலைவருக்கும் ராணி நேரடியாக உணவு பரிமாறுவது கிடையாது. இதுதான் மரபு. ஆனால் காமராஜரின் மக்கள் சேவையும், எளிமையும் ராணியை வெகுவாக கவர்ந்ததால் மரபை மீறி விருந்து கொடுத்து உபசரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2-வது முறையாக இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது 1983-ம் ஆண்டு இந்தியா வந்தார். அப்போது அன்னை தெரசாவை சந்தித்தார். 3-வதாக ஐ.கே.குஜ்ரால் பிரதமராக இருந்தபோது 1997-ம் ஆண்டு இந்தியா வந்தார். அப்போது சென்னை வந்த ராணி தரமணியில் எம்.ஜி.ஆர். திரைப்பட நகரில் கமல்ஹாசனின் மருதநாயகம் படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.

சுமார் 20 நிமிடங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதியும் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story