கள்ளக்குறிச்சி, சின்னசேலம் பகுதிகளில் கலவரம் : 144 தடை உத்தரவு

By 
kallakurichi

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கணியாமூரில் உள்ள ஒருதனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி உயிரிழப்பை கண்டித்து நடைபெற்று வந்த போராட்டம் இன்று கலவரமாக மாறியது. 

போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கியதில் விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி.பாண்டியன், கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் உள்பட 20 பேர் காயம் அடைந்தனர். 

பின்னர் பள்ளிக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்து அங்கிருந்த பொருட்களை சூறையாடினார்கள். பள்ளியின் நுழைவு வாயில் கேட்டை உடைத்த அவர்கள் அங்கிருந்த நாற்காலிகளை தூக்கி வந்து சாலையில் போட்டு தீவைத்து எரித்தனர். 

மேலும் பள்ளி வளாகத்தில் இருந்த பள்ளி பஸ்களுக்கு தீ வைத்தனர். பஸ்கள் கொழுந்து விட்டு எரிந்ததால் அந்த பகுதி புகைமண்டலமாக மாறியது. 

இதையடுத்து அதிரடி படையினர் வரவழைக்கப்பட்டு போராட்டக்காரர்கள் விரட்டி அடிக்கப்பட்டனர். 

தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை அவர்கள் கலைத்தனர். பள்ளி வளாகம் பகுதி தற்போது போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கள்ளக்குறிச்சி, சின்ன சேலம் உள்ளிட்ட தாலுகா பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார். 
*

Share this story