இலங்கையில் பெருகும் வன்முறை : துப்பாக்கிச்சூடு நடத்த முப்படைக்கு அனுமதி..
 

lanka5

கடும் பொருளாதார நெருக்கடியால் அவதி அடைந்த இலங்கை மக்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.  

ராஜபக்சே குடும்பத்தினர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். 

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும், ராஜபக்சே ஆதரவாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. 
 
இதையடுத்து, மகிந்த ராஜபக்சே உள்பட ஆளும் கட்சியை சேர்ந்த  சுமார் 35 அரசியல் தலைவர்களின் வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. 

இந்த வன்முறையில் 8 பேர் உயிர் இழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டு உள்ளன. 

பேருந்துகளுக்கு தீ வைக்கும் சம்பவங்களும் நடைபெற்றன. போலீசார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதால் பதற்றம் நீடிக்கிறது. 

இந்நிலையில், பொதுச் சொத்துகள் மற்றும் தனி நபர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவோர் மீது, துப்பாக்கிச் சூடு நடத்த இலங்கை முப்படைகளுக்கு  அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, இலங்கை ராணுவ ஊடகப் பிரிவு தகவல்கள் தெரிவித்துள்ளன.

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே தஞ்சம் அடைந்துள்ள கடற்படைத் தளத்தை பொதுமக்கள் முற்றுகை இட்டுள்ளதால் அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட மனிதாபிமானமற்ற தாக்குதலுக்கு, அதிபர் கோத்தபய மற்றும் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பொறுப்பேற்க வேண்டும் என்றும், இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 
*

Share this story